புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 டிச., 2019

சுவிஸ் தூதரக பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது

செவ்வாய் டிசம்பர் 03, 2019
சிறிலங்காவில் கடத்தப்பட்டு பாலியல் சீண்டல்களுடன் கூடிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் State secretary  பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான சிறிலங்காவின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து தனது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் உரிய சட்டங்களை பயன்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளிற்கும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக குறிப்பிட்ட பணியாளர் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார் என பாஸ்கல் பெரிஸ்வில் உறுதி செய்தார், தனிநபரின் உடல்நிலையே முக்கியமான விடயம் என அவர் வலியுறுத்தினார் என   சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளை  தாமதப்படுத்தும் நோக்கம் எதுவும் சுவிட்சர்லாந்திற்கு இல்லை, சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் தனது பணியாளர் குறித்த தனது கடமைகளை தீவிரமானதாக கருதுகின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை தூதுவருடனான இந்த சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை  குறித்தும் சுவிட்சர்லாந்து அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைவெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தூதரக பணியாளர்  தொடர்பான சம்பவத்திற்கு எதிரான ஆதாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து தூதுவரை தெளிவுபடுத்துமாறு சுவிட்சர்லாந்து அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.