கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் 2010ம் ஆண்டிலும் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 10ஆயிரம் வரையான வாக்குகளையே பெறமுடிந்தது.அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பென போட்டியிட்டு வெறும் இரண்டாயிரம் வாக்குகளையே பெற்றிருந்தனர்.
அப்போது இவர்களை நிராகரித்த மக்கள் இம்முறையும் இத்தகைய கும்பல்களை நிராகரிப்பர் எனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
இதனிடையே சிறீகாந்தா தரப்பு கூறுவது போல 90 விழுக்காடு ஆதரவாளர்கள் தம்மோடு இருப்பதாக சொல்வது பொய்பிரச்சாரமாகும்.ஒரு சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே இவர்களுடன் உள்ளனர்.அவர்கள் மீதும் கட்சி, விரைவில் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்னொரு தரப்பு கூட்டமைப்பிற்கு உண்மையான மாற்று அணி தாமே என சொல்லிவருகின்றது.
உண்மையில் அதனை மக்களே சொல்லவேண்டும்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.