செவ்வாய், டிசம்பர் 10, 2019

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை எவராலும் உடைக்க முடியாது.”– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் மற்றும் ரெலோ கட்சிகள் விலகி தனி வழியில் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது அடுத்தகட்ட நகர்வு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா கொண்டுள்ள கரிசனை உள்ளிட்ட சமகால நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் நடைபெறுகின்றது” எனவும் அவர் மேலும் கூறினார்.