கஜேந்திரகுமாரின் அரசியல் இல்லாமல் போய் விடும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில் தானாகவே இல்லாமல் போய்விடும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில் தானாகவே இல்லாமல் போய்விடும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் தமிழ் கட்சிகளிடமிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறான விமர்சனங்களை நாம் எமது கூட்டணிக்கு கிடைத்துள்ள வாழ்த்துக்களாகவே பார்க்கின்றோம்.
குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இறுமாப்புடன் எமக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்றே நாம் விரும்பினோம். அதனையே நாம் வலியுறுத்தி வந்தோம். அந்த அடிப்படையிலேயே தற்பொழுது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி உள்ளோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான், தாங்களே மாற்றுத் தலைமை என்றும் அதனை மழுங்கடிக்கவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த தேவைகளும் எமக்கு கிடையாது ஏனெனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தானாகவே இல்லாமல் போய்விடும்.
நாம் நாற்காலிகளுக்காக தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் முக்காலிக்காகவா போட்டியிடுகின்றது என்பதை நாம் கேட்கவில்லை. ஏனென்றால் நமக்கென்று சில அரசியல் நாகரிகம் உள்ளது
நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள். அது தேர்தலில் நிச்சயமாக வெளிப்படும் என நம்புகின்றோம்
தமிழினத்தின் தலைமைப்பதவி தங்களுடைய பரம்பரை என நினைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாசமாக்கிய தமிழரசுக் கட்சி எமது கூட்டணிக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது
ஒற்றுமையின் பெயரால் எம் மீது குற்றங்களை சுமத்தி வருகிறது. நாம் ரெலோவை விட்டு மூன்று தடவை வெளியேறியதாகவும் பின்னர் சேர்ந்ததாகவும் தம்பி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளர். எனினும் நாம் இம்முறை தீர்க்கமான ஒரு முடிவிலேயே வெளியேறி இருந்தோம். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது
நாம் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அனைத்துத் தரப்பும் குறிப்பாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி வந்தோம் தற்போதும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எம்முடன் இணைந்து பயணிக்க நாம் தடையாக இருக்கப் போவதில்லை. நமது கூட்டணியில் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார்