புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 பிப்., 2020

யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் யாவும் ரத்து

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தாபயவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் துணைவேந்தர் வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரிகளை சிறப்புப் பொறிமுறை ஒன்றின் ஊடாக அதி உச்சத்திறனும் அனுபவமும் உள்ளவர்களை போட்டியாளர்களாகத் தெரிவு செய்யவேண்டும்.

சிறப்புப் பொறிமுறையில் தனியார் துறையில் நீண்டகால அனுபவம் உள்ள முகாமைத்துவ அதிகாரி, இலங்கை நிர்வாக சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர் மற்றும் சேவையில் உள்ளவர் நியமிக்கப்பட வேண்டும்.இந்த சிறப்புப் பொறிமுறை துணைவேந்தருக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்முகத் தேர்வுக்கு உள்படுத்தவேண்டும்.

அவ்வாறு நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அதி உச்சத்திறனும் அனுபவமும் உள்ளவர்களின் பெயர்களை சிறப்புப் பொறிமுறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சிறப்புப் பொறிமுறையில் உள்ளவர்களுடன் தமது செல்வாக்கைச் செலுத்த அல்லது அவர்களது பணியில் தலையீடு செய்ய முற்படும் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தாரிகள் நீக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது பல்கலைக்கழக பேரவையிடம் உள்ள இந்த அதிகாரம் சிறப்புப் பொறிமுறை ஒன்றிடம் வழங்கப்படுகிறது.அதாவது பல்கலைக்கழக பேரவையின் அதிகாரம் நீர்த்துப்போகச் செய்யப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் துணைவேந்தருக்கு போட்டியிடுபவர்கள் பேரவையினால் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்களாக என்ற விளக்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய நடைமுறையில் இல்லை.இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரம் துணைவேந்தர் வெற்றிடம் காணப்படுகிறது.அந்த வெற்றிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தெரிவு இழுபறியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது