புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2020

வீரர்களின் போரில் ஆதிக்கம் செலுத்தும் மகஜனாக் கல்லூரி

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரிகள் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, இன்று (28) மகஜனாக் கல்லூரியின்
சொந்த மைதானத்தில் 20 ஆவது முறையாக ஆரம்பமாகியது.

கடந்த மூன்று ஆண்டுகளிலும் முடிவினை எட்டாத இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில், மகஜனாக் கல்லூரியிடம் இருந்து கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கந்தவரோதயா அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மைதானச் சொந்தக்காரர்களுக்கு வழங்கியது.


அதன்படி, போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மகஜனாக் கல்லூரி அணியினர் சிறந்த ஆரம்பத்தை காட்டத் தவறினர்.

மகஜனாக் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த அதன் தலைவர் கிருஷான் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனிஷ்டன், மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரான மதீஷன் ஆகியோர் பொறுமையான துடுப்பாட்டத்துடன் தமது தரப்பினை வலுப்படுத்தினர்.

இதில் அரைச்சதம் தாண்டி அசத்திய தனிஷ்டன் 75 ஓட்டங்கள் பெற, மதீஷன் 49 ஓட்டங்கள் எடுத்து அரைச்சதத்தினை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டார்.

இந்த வீரர்களின் விக்கெட்டுக்களை அடுத்து, வாமலக்ஷன் மற்றும் சிலுக்ஷன் ஆகியோர் மகஜனா அணியை வலுப்படுத்தினர்.

இதனால், மகஜனாக் கல்லூரி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 313 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்ட போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

மகஜனாக் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக வாமலக்ஷன் 50 ஓட்டங்களுடன் அரைச்சதம் பெற்றார். இதேநேரம், சிலுக்ஷன் 44 ஓட்டங்களினை எடுத்திருந்தார்.



ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் பிரஷான், கெளரிசங்கர் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.



மகஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 313/9 – தனிஷ்டன் 75, வாமலக்ஷன் 50, மதீஷன் 49, சிலுக்ஷன் 44, கெளரிசங்கர் 33/2, தனுஷ்ரஜ் 41/2, பிரஷான் 74/2

ad

ad