தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி-
‘தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும். திறமைமிக்க அமைச்சரான தொண்டமான் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற பெருமைக்குரியவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்-
“இதொகாவை விட்டு, பலர் பல காரணங்களால் பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு நடத்தியவர் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார். அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது.
இன்னமும் வாழ்ந்து இருக்க வேண்டும். நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் -
‘மலையக தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட அரசியல்வாதிகளில் தொண்டமானும் ஒருவராவார். தொண்டமான் மலையக மக்களின் முக்கிய அடிப்படை சம்பளத்தேவை சார்பாக அவர்சார்ந்த அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவரது ஆன்மா பிரிந்துள்ளது. எனவே, இவரது ஆசையை அவர்சார்ந்த தற்போதைய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் தேசிய கட்சி-
“ஆறுமுகம் தொன்டமான் தீடீரென மரணமடைந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக தமிழ் மக்களுக்காக துடிப்போடும் துனிவோடும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயற்பட்டு வந்த நம்பிக்கை மிக்க தலைவரை நாம் அனைவரும் இழந்திருக்கின்றோம்.
அவரின் இழப்பினால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடந்தை நிரப்புவது என்பது இலகுவானதோ அல்லது உடனடிச் சாந்தியமானதோ அல்ல. ஆயினும், அவர் தலைமை தாங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மூத்த தலைமுறையினரும், இளம் தலைவர்களும் ஒற்றுமையோடு செயலாற்றி, மறைந்த தலைவரின் திட்டங்களையும் பணிகளையும் தொடர்த்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தக் கூடிய உகந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
க.வி.விக்னேஸ்வரன்-
“ஆறுமுகன் தொண்டமான் தன் பணியை உணர்ந்து மலையக மக்களுக்கு ஒரு வலுவான தலைவராகத் திகழ்ந்தார். பாட்டனாரின் வழியில் அவர் அவர்களை திறம்பட வழி நடத்தி வந்து சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தமை மலையக மக்களுக்கும் எமக்கும் மிகுந்த துயரையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் தலைமைத்துவத்தில் ஒரு பாரிய இடைவெளி தெரிகின்றது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு சவாலான கால கட்டமான இத்தருணத்தில் தொண்டமானின் மறைவு ஒரு பேரதிர்ச்சியாக உணரப்படுகிறது. அவரின் வெற்றிடம் விரைவில் தக்கவரால் நிரப்பப்பட வேண்டும்.