புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 மே, 2020

தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
www.pungudutivuswiss.com
தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலிமராட்டியத்தில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளா்கள் 16 பேர்,
சரக்கு ரெயில் ஏறியதால் உடல் சிதறி பலி ஆனார்கள்.

ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 6 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த தொழிலாளர்கள் சிறப்பு பஸ், ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.


ரெயில், பஸ்களில் செல்ல வாய்ப்பு கிடைக்காத அல்லது அதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாத ஏராளமான தொழிலாளர்கள் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சைக்கிளிலும், நடைப்பயணமாகவும் குடும்பத்துடன் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.

தண்டவாளத்தில் படுத்து தூங்கினர்

நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஜல்னாவில் இருந்து புறப்பட்டனர். சாலை வழியாக சென்றால் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என பயந்த அவர்கள், தண்டவாளம் வழியாக நடையை கட்டினர். இரவு முழுவதும் சுமார் 50 கி.மீ.க்கு மேல் நடந்த அவர்கள் அதிகாலை நேரத்தில் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் பகுதியில் உள்ள கட்கேஜல்காவ் கிராம பகுதியை அடைந்தனர்.

நீண்ட தூரம் நடந்ததால் சோர்வடைந்த தொழிலாளர்கள் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடைபயணத்தை தொடங்க முடிவு செய்தனர். ஊரடங்கால் ரெயில் எதுவும் வராது என நினைத்து தண்டவாளத்திலேயே படுத்து விட்டனர். 4 பேர் மட்டும் தண்டவாளத்துக்கு சற்று அருகில் படுத்து தூங்கினர்.

சரக்கு ரெயில் ஏறியது

இந்தநிலையில் நாந்தெட்டில் இருந்து நாசிக் அருகே உள்ள மன்மாட் நோக்கி பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிச் செல்லும் காலியான சரக்கு ரெயில் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்தது. அதிகாலை 5.15 மணியளவில் அந்த சரக்கு ரெயில் தொழிலாளர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பகுதியை நெருங்கியது.

ரெயில் வரும் சத்தம் கேட்டு தண்டவாளம் அருகே படுத்து தூங்கிய 4 பேரில் 3 பேர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் மற்றவர்களை எழுப்ப முயற்சித்தனர்.

இதற்கிடையே தண்டவாளத்தில் மனிதர்கள் படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், அவசர பிரேக்கை அழுத்தி ரெயிலை உடனடியாக நிறுத்த முயற்சித்தார். ஆனால் பலன் இல்லை. தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரெயில் ஏறியது. சிறிது தூரம் சென்ற பிறகுதான் ரெயில் நின்றது.

16 தொழிலாளர்கள் பலி

நெஞ்சை பதற வைக்கும் இந்த துயர சம்பவத்தில் 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி ஆனார்கள். இறந்தவர்களின் உடல் பாகங்கள் ரெயில் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு இருந்தன.

தண்டவாளம் அருகே படுத்து இருந்தவர்கள் ஒருவர் காயம் அடைந்தார். மற்ற 3 பேர் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டதால் காயமின்றி உயிர் தப்பினர். தங்களுடன் வந்தவர்கள் கோர விபத்தில் சிக்கி பலியானதை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள்.

தகவல் அறிந்து அவுரங்காபாத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோக்சதா பாட்டீல் மற்றும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு பிறகு ரெயில் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணைக்கு உத்தரவு

விபத்து நடந்த பகுதியில் வசித்து வந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “அதிகாலையில் சத்தம் கேட்டு ஓடிவந்தேன். அப்போது தண்டவாளத்தில் தொழிலாளர்களின் உடல்கள் துண்டு, துண்டாக கிடந்தன. மேலும் அவர்களின் உடைமைகள் சிதறி கிடந்த காட்சிகள் நெஞ்சை உறைய வைத்தது” என உருக்கமாக கூறினார்.

கொரோனா பலரது உயிரை குடித்து வரும் நிலையில், அந்த கொடிய தொற்றால் வேலையிழந்த 16 தொழிலாளர்கள் சரக்கு ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து தென்மத்திய சரக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ராம் கிரிபால் விசாரணை நடத்த ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

பிரதமர் இரங்கல்

இந்த துயரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், “மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரெயிலில் சிக்கி பலியான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு துயர் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “தொழிலாளர்கள் ரெயிலில் சிக்கி உயிரிழந்த தகவல் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். விபத்து தொடா்பாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் பேசினேன். அவர் அங்குள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்” என்று தெரிவித்து உள்ளார்.

ராகுல்காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘தேசத்தை கட்டுபவர்களுக்கு நேர்ந்த துயரத்தை பார்த்து வெட்கப்பட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

இதேபோல் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து

இருக்கிறார்.

மராட்டியத்தில் நேற்று அதிகாலை தண்டவாளத்