புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூன், 2020

இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளை இன்று முதல் வழமை போல் முன்னெடுப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு முன்னதாக திட்டமிட்டிருந்ததது .

இந்தநிலையில், கடந்த வாரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரிவோர் இன்றைய தினம் மேல் மாகாணத்திற்கு வருவார்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கிறனர்.

இதற்காக இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான அதிகளவான பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சேவையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவளை தூர பிரதேசங்களில் இருந்து மேல் மாகாணத்திற்கு வரும் பயணிகளின் நன்மை கருதி 60 - 70 வீதம் வரையான தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து அலுவலக தொடருந்துகள் மற்றும் அஞ்சல் தொடருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்துகளில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரத்திற்கான காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உதவி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்