இது தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஆனந்த சாகர தேரர் பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,
“ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போயுள்ளார். இதன்காரணமாக தேசிய பட்டியல் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் மக்கள் சக்தி கட்சி 17 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு 67 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளோம். எமது கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் விமலதிஸ்ஸ தேரர் தேர்தலின் பெறுபேறுகள் வெளியான தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். தொலைப்பேசியின் ஊடாக அழைப்பு ஏற்படுத்திய போதும் இது வரையில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை. அவர் காணாமல் போயுள்ளாரா? அல்லது கடத்தப்பட்டுள்ளரா? என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.
தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்ல கூடாது என்பதை நோக்கமாக கொண்டு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளோம். தேசிய பட்டியல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதை தாமதப்படுத்துவதாகவும், அதற்குள் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள கட்சியின் பொதுச் செயலாளரை கண்டுப்பிடிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். 14ம் திகதிக்கு முன்னர் இவர் கிடைக்காவிடின் கட்சியின் யாப்பிற்கு அமைய நீதிமன்றத்தை நாடி செயற்குழுவின் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வோம்” – என்றார்