புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 அக்., 2020

20 ஐ தோற்கடியுங்கள் -திடீரென கிளர்ந்தெழுந்துள்ள பௌத்த பீடங்கள்

Jaffna Editor
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரும் இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு பௌத்த மதபீடங்கள் திடீரென தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது கொழும்பு அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசியலமைப்பு திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பௌத்தத்தின் நான்கு பிரதான மதபீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனிதனின் சிந்தனை சுதந்திரம் மற்றும் செயற்பாட்டிற்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை, அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
இது வளர்ச்சி அடையாத சமூகத்தை நோக்கி பயணிக்கும் சட்ட ஏற்பாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற வேண்டாம் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை என்பன சமநிலையில் பேணப்பட வேண்டும் என்பதே உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் எதிர்கால பயணத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்காக 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டின் நலன் மற்றும் மக்களின் இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இருபதாவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் கோட்டாபய அரசாங்கத்துக்கு பௌத்த பீடங்களின் திடீர் எதிர்ப்பு பலத்த பின்னடைவை ஏற்படுத்துமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.