ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து, தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாவதற்கு ஒரு சில மணிநேரத்துக்கு முன்பு பொதுமக்கள் தேவாலயங்கள், பார்கள் மற்றும் உணவகங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
நேற்றிரவு, வியன்னாவின் மத்தியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பொது மக்கள் ஜெப வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தேவாலயத்துக்கு அருகே வந்த தீவிரவாதிகள் ஆறு வெவ்வேறு இடங்களில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
நூறு ரவுண்டுகளுக்கு மேல் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களால் உடல் துளைக்கப்பட்ட ஏழு பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த போலீசார் பயங்கர வாதிகளில் ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர சேவை வாகனங்களின் சைரன் ஒலி நகரம் வியன்னா முழுவதும் ஒலித்தபடி இருக்கிறது.
தீவிரவாதத் தாக்குதலையடுத்து, வியன்னாவில் ராணுவம் களமிறங்கப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் தேவாலயத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினார்களா என்று பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் இருக்கும் ஹோட்டல்கள், சாலை, தேவாலயம் ஆகியவற்றைப் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், “தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்துவிடக் கூடாது. நேற்று எங்களைத் தாக்கினர். இன்று எங்கள் நண்பரைத் தாக்கியுள்ளனர். இதைத் தொடரவிடக்கூடாது” என்று தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
அமெரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வியன்னாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஐரோப்பாவில் அடுத்தடுத்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.