புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2021

ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு மற்றொரு பலப்பரீட்சை

www.pungudutivuswiss.com
ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு மற்றொரு பலப்பரீட்சை உருவாகியிருக்கிறது. சர்வதேச சட்ட ஆணைக் குழுவின் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலில் இலங்கையும் களமிறங்கியுள்ளது.

34 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சட்ட ஆணைக்குழு ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை கொண்டது. தற்போதுள்ள ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2022 டிசம்பருடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் புதிதாக 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ. நா பொதுசபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது.

உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நாடுகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் முதலாம் திகதியாகும்.

பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே தமது வேட்பாளர்களின் பெயர்களை ஐ.நா பொதுச் செயலாளருக்குப் பரிந்துரை செய்துள்ளன. இலங்கை அரசாங்கம் ஐ. நா வுக்கான நிரந்தரப் பிரதிநிதியான முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயரை முன்மொழிந்திருக்கிறது.

இந்த பரிந்துரைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன் அவருக்கு எதிரான பிரசாரங்களையும் தொடங்கியுள்ளன. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸ் நேரடியாகவே பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்துக்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

நாட்டின் நீதித்துறையில் இடம்பெற்ற அதிகபட்ச அரசியல் தலையீடாக அது இன்றைக்கும் கருதப்படுகிறது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவர் ஜ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதிப்புமிக்க ஐ.நா வின் கட்டமைப்புகளில் ஒன்றான சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக போட்டியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் ஸ்டீபன் கிண்ணூச் இந்தப் பதவிக்கு மொஹான் பீரிஸ் போட்டியிடுவது குறித்து கவலை எழுப்பியதுடன் அவர் தெரிவு செய்யப்பட்டால் மதிப்புமிக்க சட்ட ஆணைக்குழுவின் நம்பகத் தன்மைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து பிரித்தானிய அரசு கவனத்தில் கொண்டிருக்கின்றதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்திப் பணியக விவகாரங்களுக்கான வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நைஜல் அடம்ஸ், சர்வதேச தேர்தல்களில் வாக்களிப்பு தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்துவதில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தை கருதி எமது வாக்கு குறித்து முடிவு செய்வதற்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களையும் பிரித்தானியா கவனத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றிருப்பது இலங்கையைப் பொறுத்தவரையில் கவலையளிக்கும் விடயமாகும்.

மொஹான் பீரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிரான பிரசாரங்களை ஜஸ்மின் சூகாவின் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் மற்றும் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு என்பன முன்னெடுத்து வருகின்றன. இவர் சட்டமா அதிபராக இருந்த 33 மாத காலத்தில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக ஒரு வழக்கைக் கூட பதிவு செய்யவில்லை என்று இந்த அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

பிரதம நீதியரசராக இருந்த காலத்தில் பல முக்கிய வழக்குகளில் அளித்த தீர்ப்புகளை கேள்விக்குட்படுத்தியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் மயப்படுத்தப்பட்ட நீதித்துறையின் அடையாளச் சின்னமாகவே மொஹான் பீரிஸ் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

நவம்பரில் நடக்கவுள்ள ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்திலேயே, சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள போதும் இப்போதே மொஹான் பீரிஸை தோற்கடிப்பதற்கான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச அளவில் இலங்கையின் பெயர் கெட்டுப் போயுள்ள நிலையில், மொஹான் பீரிஸ் தொடர்பாக முன்னெடுக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் இலங்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஐ. நா. பொதுச்சபை உறுப்பு நாடுகள் தான் சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை தெரிவு செய்யவுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் எவ்வாறு வலய ரீதியாக தெரிவு செய்யப்படுகின்றனவோ, அது போலத் தான், சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் பிராந்திய மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளுக்கு அமைய தெரிவு செய்யப்படுகின்றனர்.

இம்முறை ஆபிரிக்க நாடுகளில் இருந்து 9 பேரும், ஆசிய பசுபிக் நாடுகளில் இருந்து 8 பேரும், மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து 8 பேரும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளில் இருந்து 6 பேரும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 3 பேரும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஒரு நாட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே உறுப்பினராக தெரிவு செய்யப்பட முடியுமாயினும், ஒரு நாடு தமது நாட்டைச் சேர்ந்த இருவரையும் வெளிநாடுகளைச் சேர்ந்த இருவரையும் ஆக மொத்தம் 4 பேரை பரிந்துரை செய்யலாம்.

இந்த முறை மேற்கு ஐரோப்பிய நாடுகள் பிரிவில் பிரித்தானியா தனது சார்பில் வேட்பாளரை நிறுத்தியிருப்பதுடன், ஆபிரிக்க வலயத்தில் போட்டியிடும் கென்யாவின் வேட்பாளரையும் பரிந்துரைத்திருக்கிறது. அதுபோலவே பிரித்தானியாவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஜப்பான், கென்யா, நைஜீரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகள் பரிந்துரை செய்துள்ளன.

ஆசியப் பசுபிக் பிராந்தியத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், ஏற்கனவே 10 நாடுகள் தமது வேட்பாளர்களை பரிந்துரைத்திருக்கின்றன. இது இலங்கைக்கு இரட்டைச் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. மொஹான் பீரிஸுக்கு எதிரான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கத்தில் கடுமையான போட்டியும் இலங்கைக்கு சவாலாக இருக்கப் போகிறது. ஏனென்றால் இந்த பிராந்தியத்தில் இருந்து, இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து, சைப்ரஸ், வியட்னாம், மொங்கோலியா, லெபனான் ஆகிய நாடுகள் போட்டியில் குதித்திருக்கின்றன.

இவற்றில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகியன இலங்கையை விட பொருளாதார ரீதியாகவும் இராஜதந்திர தொடர்பாடல் ரீதியாகவும் செல்வாக்கும் பலமும் கொண்டவை.

மொங்கோலியா, சைப்ரஸ் லெபனான் ஆகிய நாடுகள் தான் இலங்கையுடன் கடுமையான போட்டியில் இருப்பவை.

இவற்றில், லெபனானுக்கு, பஹ்ரெய்ன் ஆதரவு கொடுத்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

ஆக, எட்டாவது நாடாக தெரிவு செய்யப்படுவதற்கு இலங்கை, சைப்ரஸ், மொங்கோலியா ஆகியவற்றுக்கு இடையில் தான் கடும் போட்டி இருக்கும்.

ஐ.நா.வில் ஆசிய பிராந்தியத்தில் இருந்தும் ஆபிரிக்க வலயத்தில் இருந்தும் தான் இலங்கைக்கு ஆதரவு கிடைப்பது வழக்கம்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா போன்ற வல்லமை மிக்க நாடுகள் போட்டியில் இருப்பதால் இலங்கைக்கு சிக்கல் உள்ளது.

அதுபோலவே, ஆபிரிக்க நாடுகளை சீனா, இந்தியா, லெபனான் போன்ற நாடுகள் வளைத்துப் போடக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் இலங்கையினால் பெற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த தடைகளையெல்லாம் தாண்டி சர்வதேச சட்ட ஆணைக்குழுவில் மொஹான் பீரிஸ் இடம்பெறுவது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது.

-சுபத்ரா-

ad

ad