புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2021

தடையை மீறி விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்கா கைது!

www.pungudutivuswiss.com

உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ்பிரசாத் மவுரியா நேற்று லக்கீம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் என்ற கிராமத்தில் நடப்பதாக இருந்த விழாவில் கலந்து கொள்ள இருந்தார். அந்த விழாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவும் பங்கேற்க இருந்தார்.

உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ்பிரசாத் மவுரியா நேற்று லக்கீம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் என்ற கிராமத்தில் நடப்பதாக இருந்த விழாவில் கலந்து கொள்ள இருந்தார். அந்த விழாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவும்

பங்கேற்க இருந்தார்

உத்தரபிரதேசத்தில் லக்கீம்பூர் மாவட்ட விவசாயிகள் ஏற்கனவே மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் துணை முதல்-மந்திரியும், மத்திய மந்திரியும் தங்கள் பகுதிக்கு வருவதை அறிந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள முக்கிய சாலையில் விவசாயிகள் திரண்டு நின்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

அப்போது அந்த வழியாக பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் வாகனங்களில் வந்தனர். அந்த வாகனங்கள் மீது விவசாயிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அந்த சமயத்தில் ஒரு கார் விவசாயிகள் கூட்டத்துக்குள் புகுந்தது.

கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்துக்குள் புகுந்து கவிழ்ந்த அந்த காருக்கு அடியில் சிக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினரின் வாகனங்களை சிறை பிடித்து தீ வைத்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அந்த வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இந்த சம்பவத்தில் மேலும் 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர். பா.ஜ.க. தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் இன்று காலை ஒருவர் உயிரிழந்தார். இதனால் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக லக்கீம்பூர் மாவட்டத்தில் பதட்டம் காணப்படுகிறது.

லக்கீம்பூர் வன்முறைக்கு உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சியினர் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வன்முறைக்கு பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

இதற்கிடையே விவசாயிகள் பலியானதை கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் மாஜிஸ்திரேட்டு அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்தன. மேலும் வன்முறை நடந்த லக்கீம்பூர் மாவட்டத்துக்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் அலை அலையாக செல்ல தொடங்கினார்கள். இதனால் பதட்டம் உருவானது.

லக்கீம்பூர் மாவட்ட வன்முறை சம்பவத்தில் பலியான 4 விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக பிரியங்கா காந்தி அறிவித்தார். இதற்காக நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு லக்னோ வந்து சேர்ந்தார். லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் அவர் தங்கினார்.

பிரியங்காவை தொடர்ந்து அகிலேஷ் யாதவும் லக்கீம்பூர் மாவட்டத்துக்கு செல்ல தயாரானார். இதன் காரணமாக மேலும் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து லக்கீம்பூர் மாவட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

லக்கீம்பூர் மாவட்டத்தில் மேலும் பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அங்கு 144 தடை உத்தரவு விதித்துள்ளனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் யாரும் சர்ச்சைக்குரிய இடத்துக்கு வரக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. லக்கீம்பூர் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.

என்றாலும் தடையை மீறி தலைவர்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக லக்னோவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தலைவர்கள் வீடு முன்பு லாரிகளை நிறுத்தி தடையை ஏற்படுத்தினார்கள்.

பிரியங்கா லக்னோ வீட்டில் இருந்து புறப்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். சீதாப்பூர் மாவட்டத்துக்குள் நுழையும் முன்பே பிரியங்காவை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் நேற்று இரவே மிக ரகசியமாக பிரியங்கா லக்னோ வீட்டில் இருந்து வெளியேறினார்.

போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அவர் வேறு ஒரு காரில் ஏறி லக்கீம்பூர் மாவட்டம் நோக்கி சென்றார். திட்டமிட்டபடி சீதாப்பூர் மாவட்டத்துக்குள்ளும் அவர் நுழைந்து விட்டார். அதன் பிறகுதான் பிரியங்கா ஊடுருவி செல்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

இன்று அதிகாலை 6 மணிக்கு கர்கான் என்ற இடத்தில் பிரியங்காவின் வாகனத்தை போலீசார் மடக்கினார்கள். அப்போது போலீசாருக்கும், பிரியங்காவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்காவை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். அரசு அலுவலகம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. அவரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். இதற்கு அகிலேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் லக்னோவில் உள்ள அகிலேஷ் வீடு முன்பு திரண்டனர். அவர்கள் போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல தடவை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

என்றாலும் போலீசார் அகிலேஷ் யாதவை வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கவில்லை.

போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ் வாடி கட்சியினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸ் வாகனத்தை சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர்.

அதன் பிறகு அகிலேஷ் யாதவை வீட்டில் இருந்து வெளியே வர போலீசார் அனுமதித்தனர். திறந்த ஜீப்பில் வந்த அகிலேஷ் யாதவ் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் கடும் பதட்டம் உருவானது.

இதற்கிடையே விவசாய அமைப்பினரும் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து லக்கீம்பூர் மாவட்ட போலீசார் வன்முறை குறித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் உள்பட 14 பேர் மீது போலீசார் சட்டப் பிரிவு 302(கொலை), 304ஏ (விபத்து), 147 (கும்பலாக கூடுவது) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் கட்ட தகவல் அறிக்கையில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு சதி திட்டம் தீட்டியதாக மத்திய மந்திரி மீதும், அவரது மகன் மீதும் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. என்றாலும் உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சியினர் சமரசம் அடையவில்லை.

தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து லக்கீம்பூர் மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் இணைய தள தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை பெற முடியாத நிலையில் உள்ளனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வருண்காந்தி உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து லக்கீம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்று முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் இருந்து லக்கீம்பூருக்கு செல்ல காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து லக்னோ விமான நிலையத்தில் இருந்து காங்கிரசார் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல லக்னோவுக்கு மற்ற மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகள் வருவதை தடுக்க வேண்டும் என்று விமானத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ad

ad