விமான நிலைய பட்டுப்பாதை சிறப்பு ஓய்வு அறை வளாகத்தில் பசில் ராஜபக்ஷ, நாள்: 11-07-2022
இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார்.
மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். இவர் வகித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இவர் ராஜிநாமா செய்திருந்தார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.
இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
பயணிகள் போராட்டம்
இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.
இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது.
Twitter பதிவின் முடிவு, 1
இது குறித்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகலா கூறும்போது, "நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை, நெருக்கடி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளோம்," என்றார்.
பட்டுப்பாதை வசதி எப்படி இருக்கும்?
- இந்த வசதியை பயன்படுத்த நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இவர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.
- அதே சமயம், பிசினஸ் வகுப்பு பயணிகள் கட்டண முறையிலும் விமான நிறுவனங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு திட்டத்தின் கீழும் அவற்றின் கவனிப்பில் பட்டுப்பாதை முனைய சேவையை வழங்கலாம்.
- இது தவிர, இந்த சேவையை பெற விரும்பும் பயணி ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டிபார்ச்சர் சில்க் ரூட் லவுஞ்ச் அல்லது வருகை முனையத்தில் உள்ள வெளிப்புற கவுன்ட்டரில் இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி வசதிகளை அனுபவிக்கலாம்.