புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2023

இலங்கை உள்நாட்டுப் போர்: ரசாயன குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளியின் தகவலும் ராணுவத்தின் பதிலும்

www.pungudutivuswiss.com
இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

''எரி குண்டு என சொல்லப்படும் பாஸ்பரஸ் குண்டை (ரசாயன குண்டு) அடித்து எல்லா சனங்களும் (மக்களும்) கருகினார்கள். ஒரு மரம் கருகி, எப்படி கரி கட்டையாக விழுமோ, அப்படி தான் சனம் (மக்கள்) எல்லாம் இருந்தது. தொட்டால் கரி தான். ஒரு பயங்கரமான குண்டுத் தாக்குதலை தான் கடைசி கட்டத்தில் நடத்தி, எங்கள் மக்களை அழித்தது ராணுவம்" என கூறுகின்றார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பாபு கஜேந்தினி.

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன குண்டுத் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்டு, தனது உடலில் காயங்களோடு வாழ்ந்து வரும் ஒரு முன்னாள் பெண் போராளி.

போராட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி, இன்று தனது குடும்பத்துடன் பாபு கஜேந்தினி வவுனியாவில் வாழ்ந்து வருகின்றார்.

தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனக்கு தனது கணவர் முழுமையாக ஆதரவை வழங்கி வருவதாக கூறுகிறார்.

இந்த தம்பதியினருக்கு கல்வி கற்கும் வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் மே 18, ஒரு துக்க தினமாகும்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அந்த நாளை ஈழத் தமிழர்கள் இன்றும் துக்கத் தினமாக அனுஷ்டித்து வருகின்றார்கள்.

இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்த அனுபவங்களை தேடி பிபிசி தமிழ், இலங்கையின் வடப் பகுதிக்கு சென்றது.

இதன்போது, பிபிசி தமிழ் குழுவினருக்கு, பாபு கஜேந்தினி என்ற முன்னாள் போராளியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

விடுதலைப் புலிகள் மீதான பற்று மற்றும் தமிழ் மீதான பற்று காரணமாக, பாடசாலை காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் இணைந்துக்கொண்டதாக கூறுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் பணியாற்றிய இவர், பின்னரான காலத்தில் சுகாதார பிரிவில் பணியாற்றியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இறுதியாக கணினி பிரிவில் பாபு கஜேந்தினி பணியாற்றியுள்ளார்.

சண்டைகளின் போது, காயங்களுக்குள்ளாகும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சிகிச்சைகளை அளித்து, அவர்களின் உயிரை காக்கும் பணியை பாபு கஜேந்தினி செய்துள்ளார்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட இறுதி தருணம் வரை, முள்ளிவாய்க்கால் பகுதியில் இவர் இருந்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம், உக்கிரமடைந்திருந்தது.

இதன்போது, இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாபு கஜேந்தினி கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இவரது கை, கால், உடல் என உடம்பின் பல பகுதிகளில் தீ காயங்கள் காணப்படுகின்றன.

இலங்கை ராணுவத்தினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன குண்டுத் தாக்குதலிலேயே தான் இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகியதாக பாபு கஜேந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் ரசாயன குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

''மறக்க முடியாத அனுபவம் என்று சொல்ல போனால், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் தான். இறுதி யுத்தம் வரை நான் அவர்களோடு தான் இருந்தேன். நாங்கள் இருக்கும் இடத்தில் போராளிகளும் சரி, பொதுமக்களும் சரி கும்பலாக தான் இருப்போம். பங்கர் என்று சொன்னால், அந்த பங்கருக்குள் ஆட்களை விட்டு விட்டு, சின்னவர்களை உள்ளே விட்டு விட்டு, நாங்கள் பெரியவர்கள் வெளியில் நிற்போம். அந்த இடத்தில் எரிகணை வீச்சுக்கள் வந்தால், அந்த இடத்தில் அவ்வளவு பேரும் சிதறி போவோம். அப்படியாக இறுதி யுத்தத்தின்போது ஐந்தாம் மாதம் 10ம் தேதி பங்கருக்குள் எல்லாரையும் விட்டு விட்டு, நான் ஓரமாக இருந்தேன். உள்ளே போவதற்கு இடமில்லை. எரி குண்டு என சொல்லப்படும் பாஸ்பரஸ் குண்டை (ரசாயன குண்டு) அடித்து எல்லா சனங்களும் (மக்களும்) கருகினார்கள். ஒரு மரம் கருகி, எப்படி கரி கட்டையாக விழுமோ, அப்படி தான் சனம் எல்லாம் இருந்தது. தொட்டால் கரி தான். ஒரு பயங்கரமான குண்டுத் தாக்குதலை தான் கடைசி கட்டத்தில் நடத்தி, எங்கள் மக்களை அழித்தது ராணுவம். அந்த இடத்தில் எனக்கு நேரடியாக தாக்கம் இல்லை. அந்த வெப்பம் அடித்தது தான் எனக்கு ஒரு பக்கம் இப்படி இருக்கின்றது. எனது உடம்பு இப்படி தான் வெள்ளையாக இருக்கின்றது." என்கிறார் பாபு கஜேந்தினி.

இறுதிக் கட்டம் யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், அந்த பிரதேசத்தில் காணப்பட்ட நீர் நிலைகள் அனைத்தும் ரத்தமாகவே தெரிந்தது எனவும் அவர் கூறுகின்றார்.

''நாங்கள் வட்டுவாலுக்கு வந்து, தண்ணீரை பார்க்கின்றோமா? இரத்தத்தை பார்க்கின்றோமா என்ற நிலை தெரியாமல் இருந்தது. முழுக்க அப்படியே ரத்த வெள்ளம். தண்ணியா, ரத்தமா என்று தெரியாது. ரத்தமும் சதையுமாக தான் மக்கள் அதற்குள் கிடந்தனர். அதற்குள் தான் நாங்கள் இறங்கி வந்தோம்."

யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், கடும் காயங்களுடன் பாபு கஜேந்தினி ராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவம் இருந்ததை அறியாது, பொதுமக்களுடன் இணைந்து வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

பொதுமக்களை போன்று வருகைத் தந்த தன்னை, பொதுமக்களே காட்டிக் கொடுத்ததாகவும், அதனாலேயே தானும் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்கு எப்படி இருந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

"ஆரம்பத்தில் அது பாஸ்பரஸ் குண்டு (ரசாயன குண்டு) என்று எங்களுக்கு தெரியாது. கிபீர் தாக்குதல் நடப்படும். அந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ளவர்கள் காயப்படுவார்கள். தாக்கம் என்பது குறைவு. காயங்கள் கூடுதலாக இருக்குமே தவிர, உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். அப்படி நினைத்துக்கொண்டு தான் இருந்தோம். திடீரென பாஸ்பரஸ் குண்டுகளை போட்டு மக்கள் கருகியதும், எங்களால் என்னவென்று ஊகிக்க முடியாத நிலைமையில் தான் அங்கு இருந்தோம். பிறகு தான் தெரியும் அது பாஸ்பரஸ் குண்டு என்று. முதல் தெரியாது எங்களுக்கு" என அவர் பதிலளித்தார்.

ராணுவத்தின் பதில்

இலங்கை ராணுவத்தின் ரசாயண குண்டுத் தாக்குதலில் கருகி வீழ்ந்த மக்கள் - முன்னாள் போராளி வெளியிட்ட தகவல்

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

இறுதிக் கட்ட போரின் போது, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில், இலங்கை ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில், போர் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் முன்னாள் போராளி ஒருவர் அதே குற்றச்சாட்டை மீண்டும் முன்வைக்கின்றார். இலங்கை ராணுவத்தின் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல் காரணமாக, தான் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியது.

இலங்கை ராணுவம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரசாயன குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என அவர் பதிலளித்தார்.

''ராணுவம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரசாயன குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், அதனை கொள்வனவு செய்வதற்கு ஒரு இடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? கொள்வனவு செய்ய முடியாது. இலங்கையில் எந்தவொரு ஆயுதமும் தயாரிக்கப்படாது. இன்றும் வெளிநாடுகளிடமிருந்தே ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யும் போது, ரசாயன குண்டுகளை எவ்வாறு அவர்கள் தருவார்கள்? அவர்கள் அதனை தர மாட்டார்கள். எந்தவொரு நாடும் எமக்கு ரசாயன ஆயுதங்களை வழங்காது என்பதை முன்னிலைப்படுத்தியே, அந்த குற்றச்சாட்டை நிராகரிக்க எம்மால் முடியும்." என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.

ad

ad