புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அசாத் மௌலானா புதிய அறிக்கை!

www.pungudutivuswiss.com


சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மௌலானா  மேலும் பல தகவல்களை அடங்கிய  புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

அந்த அறிக்கையில் அவர் புத்தளத்தின் தென்னந்தோப்பில் இடம்பெற்ற சந்திப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னரும் பின்னரும் பிள்ளையானிற்கும் தனக்குமான உரையாடல்கள் உட்பட பல விபரங்களை வெளியிட்டுள்ளார்

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது . ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்ற வேண்டுகோள்கள் எழுந்துள்ள அதேவேளை பல போலிச்செய்திகளும் வதந்திகளும் வெளியாகியுள்ளன எனது குடும்பத்தினரை அவதூறு செய்துள்ளனர் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர் .

நான் பிள்ளையானிற்காக பணிபுரிந்த போதிலும் நான் ஒரு ஆயுதமேந்திய போராளி இல்லை நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்த பழகவில்லை எனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும் பல விடயங்கள் தெரியும்.

ஏப்பிரல் 21 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 40 வெளிநாட்டவர்கள் 45 குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர் – 500 பேர் காயமடைந்தனர்.

ஊடகங்கள் குண்டுதாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட்ட வேளையே சூத்திரதாரிகள் - தாக்குதலை திட்டமிட்ட ஏனையநபர்கள் இந்த தாக்குதலிற்கான நோக்கம் குறித்து எனக்கு தெரிந்திருப்பதை நான் உணர்ந்தேன்.

இந்த பேரழிவு தாக்குதலை திட்டமிடுவதில் எந்த வகையிலும் எனக்கு தொடர்பிருக்கவில்லை.

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியை தொடர்ந்து பிள்ளையான் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

2005 கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு சென்மேரிஸ் தேவாலயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலேயே அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

பிள்ளையானின் செயலாளர் என்ற அடிப்படையில் அவரது சட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகளுடன் அவரை சிறையில் சந்திப்பதற்கு நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியிருந்தது.

2017 இல் நான் சிறைக்கு சென்றவேளை அவர் காத்தான்குடியை சேர்ந்த சில முஸ்லீம் கைதிகள் தன்னுடன் ஒரே சிறைக்கூண்டில் இருப்பதாக தெரிவித்தார். காத்தான்குடியில் ஒரு குழுவினர் மீதான தீவிரவாத தாக்குதலிற்காக தந்தை மகன் உட்பட ஆறு பேர் சிறையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் .

பிள்ளையானின் வேண்டுகோளின் கீழ் சைனி மௌலவியை சந்தித்தேன் - பின்னர் சிறையில் உள்ள அவர்களின் பிணைக்கான பணத்தை அவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்காக இராணுவ புலனாய்வு பிரிவினருடன் என்னை தொடர்புகொள்ளுமாறு பிள்ளையான் கேட்டுக்கொண்டார். அவர்கள் 2017 ஒக்டோபர் 24ம் திகதி விடுதலையானார்கள்.

பின்னர் சைனி மௌலவி குழுவினருக்கும் சுரேஸ் சாலேயிற்க்கும் ( அவ்வேளை பிரிகேடியர்) இரகசிய சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் என்னை கேட்டார். அந்த சந்திப்பு எங்கு இடம்பெறும்- நேரம் குறித்து சுரேஸ் சாலே எனக்கு அறிவிப்பார் என பிள்ளையான் தெரிவித்தார்.

சில நாட்களின் பின்னர் சுரேஸ் சாலே சைனி மௌலவியை புத்தளத்தில் உள்ள வானாத்தவில்லு பகுதியில் சந்திப்பதற்காக வருமாறு என்னிடம் தெரிவித்தார். மறுநாள் நான் இராணுவபுலனாய்வு அதிகாரியொருவருடன் புத்தளம் சென்றேன். சைனி மௌலவி குழுவினர் குருநாகலில் இருந்து வந்தனர்.

இந்த சந்திப்பிற்காக எனது வாகனத்தையும் வாகனச்சாரதியையும் பயன்படுத்த வேண்டாம் என பிள்ளையான் எனக்கு ஆலோசனை வழங்கினார்.

2018 பெப்ரவரி மாதம் 50 -60 தென்னைகள் காணப்பட்ட பெரிய தென்னந்தோப்பில் அந்த சந்திப்பு இடம்பெற்றது. சுரேஸ் சாலே டொயோட்டா காரில் சாரதியுடன் வந்து இறங்கினார் ( சாம்பல் நிறம்) அரை மணித்தியாலத்தின் பின்னர் வெள்ளை வானில் சானி மௌலவி ஆறு பேருடன் வந்தார்.

சானி மௌலவி தனது மூத்த சகோதரர் ஜஹ்ரான் ஹாசிமை அந்த குழுவின் தலைவர் என அறிமுகப்படுத்தினார். அந்த சந்திப்பு இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் இடம்பெற்றது – நான் அதில் கலந்து கொள்ளவில்லை வெளியில் காத்திருந்தேன்.

இந்த சந்திப்பிற்கு மறுநாள் நான் பிள்ளையானை சந்தித்து நடந்த விடயங்கள் குறித்து தெரிவிப்பதற்காக மட்டக்களப்பிற்கு சென்றேன் . சுரேஸ் சாலேயிற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் காணப்பட்ட பெரும் திட்டம் போன்ற ஒன்று ஜஹ்ரான் குழுவினர் தொடர்பாகவும் காணப்படுவதாக பிள்ளையான் தெரிவித்தார்.

இந்த விடயங்களை இரகசியமாக வைத்திருங்கள் உதவி கேட்டால் உதவுங்கள் என பிள்ளையான் தெரிவித்தார்.

நான் ஜஹ்ரான் குழுவினரை ஒரேயொரு தடவை சந்தித்தேன் - அந்த சந்திப்பு பெப்ரவரி 2018 இல் இடம்பெற்றது – சுரெஸ் சாலேயை சந்தித்த வேளை அவர்களை சந்தித்தேன். எனக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை பயங்கரவாத தாக்குதல் இடம்பெறும் வரை இது குறித்து எனக்கு தெரியாது.

2019 ஏப்பிரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சுரேஸ் சாலே காலை 7 மணிக்கு என்னை அழைத்து தாஜ்சமுத்திரா ஹோட்டலிற்கு சென்று ஒரு நபரை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்-அவரின் கையடக்க தொலைபேசியையும் பெற்றுக்கொள்ளுமாறு அவர் என்னை கேட்டார்-நான் அதற்கு நான் கொழும்பில் இல்லை மட்டக்களப்பில் இருக்கின்றேன் என தெரிவித்தேன்.

இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நாடாளவிய ரீதியில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் இடம்பெற்றன- உடனடியாக பிள்ளையான் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடாக எனக்கு செய்தி அனுப்பி தன்னை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்-நான் அவரை 11 மணிக்கு சந்தித்தவேளை இந்த தாக்குதல்களின் சூத்திரதாரி சுரேஸ் சாலே என பிள்ளையான் தெரிவித்தார்.

இவ்வாறான ஒன்று இடம்பெறும் என தான் கருதியதாகவும் அவர் தெரிவித்தார். சைனி மௌலவியை தொடர்புகொள்ளுமாறு கேட்டார் -நான் தொடர்புகொண்டேன் பதில் இல்லை.

ad

ad