புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2024

சர்வதேச நியமங்களை மீறி போராட்டங்களை அடக்கும் அரசாங்கம்! - சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு. [Thursday 2024-04-11 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் 2022 - 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு தவறுவது அடக்குமுறையின் குறியீடாகும் எனத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2022 - 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு தவறுவது அடக்குமுறையின் குறியீடாகும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களின்போது சட்டவிரோத படைப்பலம் பிரயோகிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதுடன், அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களின்போது சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது பற்றி 'எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் ஒடுக்கத்தயார்' எனும் மகுடத்திலான விரிவான அறிக்கையொன்று சர்வதேச மன்னிப்புச்சபையினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

2022 மார்ச் - 2023 ஜுன் வரையான 16 மாதகாலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற 30 ஆர்ப்பாட்டங்களின்போது, அவற்றை ஒடுக்குவதற்காகக் கையாளப்பட்ட உத்திகள் மற்றும் பிரயோகிக்கப்பட்ட படை பலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட ஆய்வின் அடிப்படையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது.

இந்த ஆய்வானது இலங்கையின் சட்ட அமுலாக்க கட்டமைப்புக்களால் நிகழ்த்தப்படும் சட்டவிரோத கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தினதும், முறையற்ற தடியடி பயன்பாட்டினதும் ஒரு தொடர் போக்கைக் காண்பிக்கின்றது.

இதுபற்றி அரைவாசிக்கும் மேற்பட்ட போராட்டங்களை ஆராய்ந்ததில் குறைந்தபட்சம் 17 போராட்டங்களில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களைப் பின்பற்றுவதற்குத் தவறியுள்ளமையை அவதானிக்கமுடிகின்றது. இந்தப் போக்கு இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மட்டுப்படுத்துகின்றது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையானது பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் உள்ளடங்கலாக பரந்துபட்ட அடிப்படையிலான பிற உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உணர்ந்துகொள்வதற்கும் பயன்படக்கூடிய பெறுமதிமிக்கதோர் கருவியாகும்.

இது ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் மிக அவசியமானதாகும். எனவே அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு தவறுவது அடக்குமுறையின் குறியீடாகும். அதேபோன்று அவ்வுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் சார்ந்த கடப்பாடு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கு உண்டு.

கடந்த 2022 பெப்ரவரி மாதமளவில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் எனவும், பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றுக்கு எதிராக பாதுகாப்புத்தரப்பினர் ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் பிரயோகித்தனர். குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொடிய மற்றும் வலுக்குறைந்த ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் 'அரகலய' என அழைக்கப்படும் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தன. இருப்பினும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் போராட்டங்களுக்கு எதிராக சட்டவிரோத பலத்தைப் பிரயோகிப்பது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரும் தொடர்ந்தது.

அதேபோன்று நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அமைதியான முறையில் இப்போராட்டங்களை முன்னெடுத்தோருக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் தொடர் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் இடையூறு விளைவித்தல் ஆகியவற்றை மேற்கொண்டன.

2022, 2023 ஆம் ஆண்டுகளில் அமைதிப்போராட்டக்காரரர்கள் கலைந்து செல்வதற்கு போதிய கால அவகாசத்தை வழங்காமலும், அவர்களுக்கு காயம் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்கு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமலும், சர்வதேச நியமங்களை மீறி போராட்டக்காரர்களுக்குப் பின்னாலும், பாடசாலைகள், வீதிகள் மற்றும் பிற திறந்தவெளி பகுதிகளுக்கு அருகாமையிலும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ளப்பட்டமையை நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைதியான ஒன்றுகூடல்களை எளிதாக்குவதை அடிப்படையாகக்கொண்ட ஒட்டுமொத்த அணுகுமுறையைப் பின்பற்றுவதுடன் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களினதும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிசெய்தல், ஆர்ப்பாட்டங்களைக் கையாளும் செயன்முறை சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைவதை உறுதிசெய்தல், ஆர்ப்பாட்டங்களின்போது சட்டவிரோத படைப்பலம் பிரயோகிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல், அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துதல் ஆகியவற்றுக்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

ad

ad