64.4 மீற்றர் நீளமுள்ள குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது 40 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை 50 பேர் நேரில் சென்று பார்வையிடவுள்ளதோடு, கப்பல் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பணியாளர்களும் கப்பலை பார்வையிட வருகை தரவுள்ளனர். ஐஎன்எஸ் ஷல்கி என்பது இந்தியக் கடற்படையின் ஷிஷுமர் பிரிவு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது 07 பெப்ரவரி 1992 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கு விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பலானது ஆகஸ்ட் 04 ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. |