மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியே எழுத்துமூலமாக அறிவித்துவிட்டார். அக்காலம் தேர்தலுக்குரியதாக இருந்தமையால் கட்சியால் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியவில்லை. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் எழுத்துமூலமாக மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் அவர் ஏற்கனவே அறிவித்த பதவி விலகல் நிலைப்பாட்டிலா உள்ளார் என்ற கேள்வியை எழுப்பி எழுத்துமூலமாக கடிதமொன்றை அனுப்பியிருந்தார். ஆனால் அதற்குரிய பதிலை கட்சியின் தலைவர் அனுப்பி வைக்கவில்லை. ஆகவே அவர் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்கும் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றார் என்று தான் கருதும் நிலைமை ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக தானாகவே அவர் அறிவித்த பின்னர் அப்பதவி வெற்றிடமாகிறது. இந்த விடயத்தில் மத்தியசெயற்குழு யாரையும் பதவி நீக்கம் செய்யவில்லை. உறுப்புரிமையை இழக்கவும் செய்யவில்லை. அறிவித்த முடிவொன்றையே அமுலாக்குவதற்கு முனைகின்றது. எனவே இந்த விடயத்தில் பொதுச்சபையின் அனுமதி அவசியமற்றது. உண்மையில் மத்திய குழுவின் தெளிவான நிலைப்பாட்டிற்காகவே வாக்கெடுப்புக் கூட அவசியமாகின்றது. கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக அறிவித்து ஒன்றரை மாதம் நிறைவடைந்திருக்கின்றது என்பதும் இங்கே முக்கியமான விடயமாகின்றது என்றார். |