24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானிலிருந்து எச்சரிக்கை
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஏப்ரல் 30) இரண்டாவது பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக உரிய பதிலளி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.