புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2025

www.pungudutivuswiss.com
கிழக்கில் ஹர்த்தால்- ஆதரவும் புறக்கணிப்பும்!
[Monday 2025-08-18 18:00]


வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கிழக்கிலும்  பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கிழக்கிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, வெருகல், மூதூர் கிழக்கு, புல்மோட்டை பிரதேசங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலையில் பாடசாலைகளும் ஸ்தம்பித்ததுடன் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.

இதேவேளை திருகோணமலையில் மத்திய பொதுச்சந்தை, மத்திய பேரூந்து நிலையம் , வங்கிகள், நிதிநிறுவனங்கள், கூட்டுறவு கடைகள், அரச நிறுவனங்கள் வழமை போன்று இயக்குகின்றன.

தம்பலகாமம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பகுதியிலும் திங்கட்கிழமை (18) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது. வடகிழக்கில் பூரணமான ஹர்த்தால் அனுஷ்டிப்பு இடம்பெற்ற நிலையில் தம்பலகாமம் வர்த்தகர்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி

களுவாஞ்சிக்குடி பகுதியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் திங்கட்கிழமை (18) முற்றாக மூடப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள், என்பன பூட்டப்பட்டுள்ளன.

எனினும் உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்கி வருவதோடு, கிராமங்களிலுள்ள உள்ளுர் வர்த்தக நிலையங்களும் வழமை போன்று செயற்பட்டு வருகின்றன.

மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் ஹர்த்தால் திங்கட்கிழமை (18) அனுஸ்டிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை , பாண்டிருப்பு , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, மல்வத்தை ,நாவிதன்வெளி ,மத்தியமுகாம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்பிலுவில், கோமாரி, தம்பட்டை ,பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இப்பகுதியில் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. இது தவிர தனியார் அரச வங்கிகள் வழமை போன்று இயங்கியதுடன் தனியார் நிறுவனங்கள் அரச திணைக்களங்களும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டன.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர்.

ad

ad