மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! [Tuesday 2025-09-09 17:00] |
![]() மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியதிற்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் உள்நாட்டு பொறிமுறையில் செயல்படுவதாகவே கூறியுள்ளார். ஆனால் ஆணையாளர் வெளிநாட்டு பொறிமுறை சிறந்தது என்று கூறியுள்ளார். எவ்வாறினும் உள்நாட்டு பொறிமுறையில் நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் ஒவ்வொரு அரசாங்கமும் உள்நாட்டு பொறிமுறையே கூறி வந்துள்ளன. இதில் இனப்படுகொலை செய்த இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் பாதுகாக்கப்படுவர். அதனாலேயே வெளிநாட்டு அனுசரணையில் வெளிநாட்டு பொறிமுறை அடிப்படையில் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏன் நீங்கள் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்கவில்லை. இதில் உங்களுக்கு பயமா? உங்களுக்கு பயம் என்ற காரணத்தினால்தான் நீங்கள் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்கவில்லை. இனப்படுகொலை செய்த இராணுவம், புலனாய்வு பிரிவு அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் ஒட்டுக் குழுக்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே நீங்கள் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்கவில்லை. நீங்கள் உண்மையானவர்கள் என்றால் அந்த பொறிமுறையை ஏற்கவேண்டும். உங்களுக்கு பயம் இல்லையென்றால், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றால் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்க வேண்டும். அப்படியில்லை என்றால் நீங்கள் பயந்து இருக்கின்றீர்கள். இங்கு முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் செம்மணி போன்ற எத்தனையோ இடங்களில் இலட்சக்கணக்கான கொலைகள் நடந்துள்ளன. இதற்கான நீதியை நாங்கள் கோரி நிற்கின்றோம். உள்நாட்டு பொறிமுறையில் இதற்கு நீதி கிடைக்காது என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொண்டு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தால் போதைப்பொருள், இலஞ்சம் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது நல்ல விடயமே. இதேபோன்று இந்த விடயத்திலும் நீங்கள் வெளிநாட்டு பொறுமுறையை ஏற்கவேண்டும் என்றார். |
-
10 செப்., 2025
www.pungudutivuswiss.com