நாளை தொடங்குகிறது ஜெனீவா கூட்டத்தொடர்! [Sunday 2025-09-07 17:00] |
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது |
ஜெனீவாவில் நாளைய தினம் ஜெனீவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் நாள் அமர்வில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து மியன்மார் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் சுயாதீன விசாரணைப்பொறிமுறை குறித்த விவாதம் நடைபெறும். அதன் பின்னர் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும். 'இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையக்கூடிய சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்குத் தற்போதுவரை தவறியிருக்கின்றன. இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரதும், சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை வென்றெடுத்த முன்னேற்றகரமானதொரு செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகரவேண்டும்' என உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர், இலங்கை சார்பில் கூட்டத்தொடரில் பங்கேற்றவுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்திப் பதிலளிப்பார். இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான உறுப்புநாடுகளினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் இம்மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளன. |
-
7 செப்., 2025
www.pungudutivuswiss.com