இலங்கை போக்குவரத்து சேவையினை வடக்கில் சுமூகமாக்க தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் முன்னெடுத்த பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பின் ஆதரவை பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சமரச பேச்சை நிராகரித்துள்ளன.
தமக்கான ஊதியத்தை காலப்பகுதியில் மாதாந்தம் சீராக வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களமாக்கும் பட்சத்தில் சமரசத்திற்கு வர தொழிற்சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன.
இன்று புதன்கிழமை (29) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் பேருந்து நிலைய கள விஜயத்தை மேற்கொண்டனர்.
நாம் தனிப்பட்ட ஒரு கட்டமைப்பு. எமக்கென ஒருவரையறை இருக்கின்றது.அதை நாம் மீறி செயற்படவில்லை. எமது சபையின் அபிவிருத்திகளுக்கு நாம் தடையாக இருக்கப் போவதில்லையென இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தனியார் போக்குவரத்து சேவைகளுடன் இணைந்து சேவைகளை முன்னெடுக்க தாம் நிர்ப்பந்திக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சகிதம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் சிவஞானம் ஆகியோர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
