நீல நிறத்தில் தோன்றிய நாய்கள்.. திகைத்துப்போன குழுவினர்!
சில பூக்கள் நிறம் மாறுவதைக் கண்டிருக்கலாம்; அதுபோல், சில பூச்சியினங்கள் நிறம் மாறுவதைக் கண்டிருக்கலாம். ஆனால், நாய்கள் நிறம் மாறியிருப்பதாகச் சொல்லப்படும் தகவலை நாம் இப்போதுதான் கேள்விப்பட முடியும். இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது குறித்து இந்தக் கட்டுரையில் அறிவோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, உக்ரைன். இந்த நாட்டின் மீதுதான் ரஷ்யா, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் வடக்குப் பகுதியின் செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் ஓர் அணு உலையில், கடந்த 1986ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. இது, உலகின் மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது. இதில் பலர் உயிரிழந்தனர்.

மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்துக்குப் பின், அந்நகரத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதி, செர்னோபில் விலக்கு மண்டலம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்மண்டலத்தில், கதிர்வீச்சுக்குப் பின் வெளியேறிய மக்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், அந்த அணுமின் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சில நாய்களின் ரோமம் நீலநிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது. 'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்திய வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவச் சோதனைகளின்போது, துடிப்பான நீல நிற ரோமங்களுடன் மூன்று நாய்களைக் குழு கண்டறிந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நாய்கள், 1986ஆம் ஆண்டு, செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. இந்த நாய்களை, 'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' அமைப்பு பராமரித்து வருகிறது. சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவச் சேவைகளை அந்த அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த நிலையில்தான் நாய்களின் நிற மாற்றம் அவர்களுக்கே புதிதாய்த் தெரிவதாகக் கூறியுள்ளனர். இது, திடீரென நிகழ்ந்தது அல்ல எனவும், கடந்த 39 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரு நாய், முழுதுமாக நீல நிறத்தில் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
நாய்களின் நிறம் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. இது, ஏதாவதொரு ரசாயனத்தில் விழுந்திருக்கலாம் எனவும், இதனால், அதன் வெளிப்புறம் நீல நிறத்தில் மாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம், இவற்றின் ஒட்டுமொத்த உடல்நலனில் உள்பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது என நம்பப்படுகிறது. எனினும், இதை உறுதிபடுத்த முழுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆனால் நிறம் மாறியபோதிலும், இங்குள்ள நாய்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக நாய் பராமரிப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும், அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைத் தவிர, அவற்றின் இயல்பான நடத்தையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் இல்லை என அந்தக் குழு கூறியுள்ளது. அதேநேரத்தில், இந்நாய்களைப் பிடித்து அவற்றின் நீல நிறத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதே முதன்மையான நோக்கம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். அவற்றின் உண்மையான காரணத்தைக் கண்டறிய நாய்களின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளைச் சேகரிக்கும் பணிகளிலும் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.







