தேவா இசையமைத்த பல படங்களில் இசை உதவி என்று சபேஷ் - முரளி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரஷாந்த், சிம்ரன் நடித்து உருவான படம் `ஜோடி'. இப்படத்திற்கு இசையமைத்தது ஏ ஆர் ரஹ்மான். இப்படத்தின் பின்னணி இசை சபேஷ் - முரளி. இந்தப் படத்தின் மூலம் பின்னணி இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் - முரளி, தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்து பிரபலமானார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த `சமுத்திரம்' படம் மூலம் பாடல் + பின்னணி இசை அமைத்து தங்கள் இசைப்பயணத்தை தனியாக துவங்கினார்கள். சேரன் இயக்கத்தில் உருவான `ஆட்டோகிராஃப்' படத்திற்கு இசை பரத்வாஜ். அப்படத்திற்கு பின்னணி இசையமைத்தது சபேஷ் - முரளி. இவர்களது திறமையை பார்த்த சேரன், தான் அடுத்து இயக்கிய `தவமாய் தவமிருந்து' படத்திற்கு இசையமைக்க வைத்தார். தொடர்ந்து `நைனா', `பாறை', `இம்சை அரசன் 23ம் புலிகேசி', `பொக்கிஷம்', `மாயாண்டி குடும்பத்தார்' எனப் பல படங்களில் தங்கள் தனித்துவமான இசையைக் கொடுத்தனர்.

இசையமைப்பாளராக பல படங்கள் பணியாற்றிய போதும், விரைவாக படங்களுக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுக்கும் சபேஷ் - முரளி கூட்டணியை தேடி பல படங்கள் வந்தன. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய `பஞ்ச தந்திரம்', சிம்பு தேவன் இயக்கிய `இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', பார்த்திபனின் `வித்தகன்', பாரதிராஜாவின் `அன்னக்கொடி', முத்தையாவின் `கொடிவீரன்' என சமீபகால சினிமா வரை சபேஷ் - முரளியின் இசை இடம்பெற்றது.
இசையில் சகோதரர் முரளியுடன் இணைந்து கூட்டணியாக வென்ற சபேஷ், பாடல் என்றால் சோலோவாக இறங்கி கலக்குவார். தேவா இசையில் உருவான `கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில் `கொத்தாள் சாவடி லேடி', `ஆனந்த பூங்காற்றே' படத்தில் `உதயம் தியேட்டருல', `காதலே நிம்மதி' படத்தில் `கந்தன் இருக்கும் இடம்', `நினைவிருக்கும் வரை' படத்தில் `காத்தடிக்கிது' என பல ஹிட் கானாக்களை பாடியது தேவா எனக் கடந்திருக்கக் கூடும். ஆனால் இவற்றில் சபேஷின் குரலும் கலந்திருக்கிறது. அவரின் துள்ளலான அந்தக் குரல் பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.