அரியாலையில் தின்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்ஙளில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி வீதியை வழிமறித்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.
அதனை அடுத்து. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் போராட்ட இடத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுனர் செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபை, எமது ஊர்மக்களுடன் எந்தவகையிலும் கலந்து பேசாது சூழலை மாசுபடுத்தக் கூடிய குப்பைகளை எமது ஊரில் வீசும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டு மல்ல இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தனமாக எந்தவகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும்.
எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமறைக்கும் சொந்தமானவையாகும்.
எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு.
இதனால் மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான குப்பை மேட்டுத் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிட என தெரிவித்தனர்.அரியாலையில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில்நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அரியாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை அரியாலை பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்திருந்த தவிசாளரிடம் மக்கள் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் முகமாக அரியாலை பகுதியில் சகல அனுமதிகளை பெற்றே பிரதேச சபை செயலாளரால் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூட இந்த இடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரால் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையமான காரைக்கால் பகுதியில் இருந்த நிலையத்தில் தற்போது அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அரியாலையில் இந்த இடம் பொருத்தமான இடமாக காணப்பட்டமையால் அதில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைத்துள்ளோம்.
இது குப்பைகளை கொட்டும் இடமில்லை. தரம் பிரிக்கும் இடம். இந்த மக்களை சில குப்பைகளை கொட்டும் இடம் என கூறி குழப்பியுள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்.
வடமாகாண ஆளுநரிடம் திண்ம கழிவகற்றலுக்கு பொருத்தமான திட்டத்தினை தீட்டுமாறு கோரி உள்ளோம். அவ்வாறான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இந்த இடத்தினை நாம் தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம்.
இதொரு சுற்றுலா தளம் என்கின்றார்கள். இது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மயானத்திற்கு அருகிலையே அமைக்கப்பட்டுள்ளது
திண்ம கழிவுகளை அகற்ற வேறு இடங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றால் இந்த இடத்தினை தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம் என உறுதி அளிக்கிறோம் என தெரிவித்தார்