இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா, சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா, சட்டத்தரணி ஷபானா குல்-பேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் உயர்ஸ்தானிகர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலம் பூர்த்தியடையவுள்ள நிலையில், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்திருத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன உள்ளடங்கலாக தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினர். அதேபோன்று இலங்கையை காலனித்துவ ஆட்சியின்கீழ் வைத்திருந்த நாடு என்ற ரீதியிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகித்த அமெரிக்கா அதிலிருந்து விலகியதன் பின்னர் அதற்குத் தலைமை தாங்கும் நாடு என்ற ரீதியிலும் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு பிரிட்டனுக்கு இருப்பதாகவும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர். அத்தோடு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாகத் தெரிவித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரிட்டன் அழுத்தம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். |