
- ரஞ்சன் அருண் பிரசாத்
- பிபிசி தமிழுக்காக
(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற தினம் வரை மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பதை அறிந்தோம்.
குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர்.
மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் பலர் புதைந்த பல இடங்களில், தமது உறவினர்களின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், பொது மக்களே தோண்டி எடுத்தனர்.
இது தவிர்த்து, மண்ணில் புதையுண்ட மக்களின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் உதவியோ, மீட்புக் குழுக்களின் உதவியோ அல்லது அரசாங்கத்தின் வேறு உதவிகளோ கிடைக்கவில்லை என்று பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
உறவினர்களை தோண்டி எடுக்கும் பரகல்ல மக்கள்
நாவலபிட்டி நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை கிராமமே பரகல்ல.
End of அதிகம் படிக்கப்பட்டது
பரகல்ல பகுதியில் பெரும்பாலும் தேயிலை தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்தவர்களில் பரகல்ல மேற்பிரிவில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் லயின் அறை தொகுதி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் வாழ்ந்த அந்த லயின் அறைகள் மீது கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இன்றும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பரகல்ல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட மக்களை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடும் மழையையும் பொருட்படுத்தாத, அதே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தங்களைத் தாங்களே தோண்டியெடுக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து தமது உறவுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தேடிய தருணத்தில் பலரது சடலங்களை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது. பின்னர், மீட்கப்பட்ட சடலங்கள் அந்தப் பிரதேசத்திலேயே மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை
பரகல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பிபிசி குழு டிசம்பர் 3ஆம் தேதி சென்றிருந்தது.
லயின் அறைகள் மீது பாரிய கற்கள் வீழ்ந்த காட்சிகளை நாங்கள் பதிவு செய்தபோது, அங்கிருந்த கற்களுக்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
பாரிய கற்கள் காணப்படுகின்றமையினால், கற்களைத் தம்மால் உடைக்க முடியாதுள்ளது என்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மண் அகழும் இயந்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரதேச மக்கள், "மண் அகழும் இயந்திரங்கள் கிடைக்குமாக இருந்தால் கற்களுக்குக் கீழுள்ள சடலங்களைத் தோண்டி எடுத்து, முறைப்படி அடக்கம் செய்ய முடியும்" என்று குறிப்பிடுகின்றனர்

பிபிசி குழு அடையாளம் கண்ட சடலங்கள்
பரகல்ல பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில், பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கால்களுக்குக் கீழே ரத்தம் கசிந்திருப்பதை அவதானித்திருந்தனர்.
அந்த இடத்தில் சற்று மண்ணை அப்புறப்படுத்திய தருணத்தில், அந்த இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமொன்று மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அதையடுத்து, பிரதேச மக்களுக்கும், போலீசாருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
பிரதேச மக்கள் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், யுவதியின் கால்களுக்கு அருகில் குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்ற தருணத்தில், மற்றுமொரு பெண்ணின் சடலமும் அந்த இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது.
இவ்வாறு குறித்த இடத்திலிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைக்கப்பட்டன. பின்னர் அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தில் குழியொன்று தோண்டப்பட்டு, முறைப்படி அடக்கம் செய்ய பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மக்கள் கூறுவது என்ன?
தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
''அரசாங்கத்தில் சடலங்களை எடுக்க யாரும் இன்றும் எந்த உதவிகளையும் செய்யவில்லை. மேலே சாலை இருக்கின்றது. எங்களுக்கு இப்போது பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) ஒன்று தேவைப்படுகின்றது. பெக்கோ ஒன்று கொடுத்தார்கள் என்றால், மண்ணுக்கு அடியிலுள்ள ஆட்களை மீட்டெடுக்கலாம்.
நிதி, சாப்பாடு கிடைக்கின்றது. ஆனால், இதற்கு அரசாங்கம் சார்பில் பொறுப்பானவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் முக்கியமாக கேட்பது பெக்கோ இயந்திரம் ஒன்று மாத்திரமே...'' என சாந்தகுமார் தெரிவித்தார்.
அயல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பரகல்ல பகுதி மக்களுடன் இணைந்து சடலங்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அயல் பிரதேச இளைஞரான சுதாவும், பிபிசி தமிழிடம் பெக்கோ உதவியோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் பக்கத்து ஊரு. எங்களுடைய ஊரில் ஒரு பிரிவுதான் இது. இது நடந்து 7 நாட்கள் இருக்கும். அரசாங்கத்தால் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
மேலும், "முதல் நாளே எங்களுக்குச் சொல்லியிருந்தால், எங்களுடைய பசங்களை (இளைஞர்கள்) வைத்து நாங்களே தோண்டி எடுத்திருப்போம். மூன்று நாட்கள் கழித்துதான் எங்களுக்குச் சொன்னார்கள். எங்களுடைய பசங்கள் வந்துதான் ஐந்து சடலங்கள் போலத் தோண்டி எடுத்தோம்" என்றார்.
பெக்கோ இயந்திரமோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறிய சுதா, "அரசாங்கம் முடிவு ஒன்றை எடுத்து, இந்த இடத்தைச் சுத்திகரித்து தந்தால், நல்லதொரு உதவியாக இருக்கும். சடலங்களை நாங்களே தோண்டி எடுக்கின்றோம். போலீசாரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. நாங்களே குழியை வெட்டிப் புதைக்கின்ற நிலைமைதான் வந்திருக்கின்றது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு