-

29 டிச., 2025

comமலேசியாவில் கூட்டணிக்கு டீல் போடப்பட்டதா ? ஓபிஎஸ், டிடிவி தினகரன்

www.pungudutivuswiss.com


நேற்று மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், "இப்படியொரு கூட்டமா?" என்று அரசியல் தலைவர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் வியந்து போயுள்ளனர். விஜய்யின் செல்வாக்கைக் கண்டு மலேசியாவே அதிர்ந்துள்ள சூழலில், கடந்த 26-ஆம் தேதியே அங்கு சென்ற விஜய், நட்சத்திர விடுதி ஒன்றில் ஓ.பி.எஸ் (OPS) ஆதரவாளர் ஒருவரைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களைத் தனது கட்சியில் நேரடியாக இணைத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்கள் ஒரு தனி அணியாகவோ அல்லது கட்சியாகவோ வரும்பட்சத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என்றும் விஜய் கூறியதாகத் தெரிகிறது. ஏற்கனவே டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 'தமிழக வெற்றிக் கழகத்தில்' (தவெக) அவர்களை இணைக்க வேண்டாம் என்பதே மூத்த அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.

எந்தக் கறையும் படியாத அரசியல்வாதிகளை மட்டுமே கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்கள் ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்துத் தங்களோடு கூட்டணிக்கு வருவதே நல்லது என்ற முடிவில் விஜய் உறுதியாக உள்ளாராம். இதற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான், ஓ.பி.எஸ் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தவெக கூட்டணி தொடர்பாக விஜய் சூசகமாகப் பேசியுள்ளார். "நான் எப்போதும் தனியாக வந்திருக்கிறேன்?" என்று கேள்வி எழுப்பிய விஜய், "33 ஆண்டுகளாகவே ஒரு அணியாக (ரசிகர்களுடன்) தானே வந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். அவர் 'அணி' என்று குறிப்பிட்டது எதிர்காலக் கூட்டணியைக் குறிப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதி என்ற பேச்சுகள் பலமாகத் தொடங்கியுள்ளன.

ad

ad