www.pungudutivuswiss.com
முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத தயார்.. ஈபிதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்று, அவருடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி சவால் விடுத்துள்ளார்.
"திமுக ஆட்சியின் சாதனைகள் போன்று அதிமுகவுக்கு இருக்கிறதா?" என்று முதல்வர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது என்பதையும், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி அதிமுகவின் சாதனை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் வீதியில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
