-

9 டிச., 2025

www.pungudutivuswiss.comயாழில் இருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் அனுபவம் இன்றைய ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வந்துள்ளது.
////
பேருந்தில் பயணித்தவர்களில் பத்மநிகேதன் என்ற இளைஞன் உயிரிழந்தது தவிர , பேருந்தில் இருந்து காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புகையிரதத்தில் போன மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று , மேலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என அநுராதபுரத்துடன் புகையிரதம் நிறுத்தப்பட்ட வேளை , மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதா ? கொழும்பு செல்வதா ? என்ற குழப்பத்தில் , இனி திரும்பி போறத என்று யோசித்து விட்டு , அநுராதபுர புகையிரத நிலையத்தில் இருந்து அநுராதபுர புதிய பஸ் நிலையம் சென்று கொழும்பு பஸ் ஏறி கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர்.
இராஜாங்கனை எனும் இடத்தில் ஊரவர்கள் கூடி பேருந்தினை மறித்த போதும் , முன்னால் சென்ற பேருந்துகள் சென்று விட்டன தானே , நாமும் போய்விடுவோம் என போய் தான் வெள்ளத்தில் மாட்டி இருக்கிறார்கள்.
இவர்கள் பாலத்தடிக்கு சென்ற வேளை தான் கலாவாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டததால் , காட்டாற்று வெள்ளம் பாய்ந்துள்ளது. அதனால் பேருந்தின் இயந்திரம் நின்று மீண்டும் இயங்க மறுத்ததால் , பேருந்தினுள் வெள்ளம் சடுதியாக ஏறியதால் , பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
பேருந்தில் இருந்தவர்களில் பத்மநிகேதனின் மொபிட்டல் சிம் மாத்திரமே வேலை செய்ததால் , (ஏனையவர்களின் போனில் சிக்னல் இல்லை) அவரது போனில் , இருந்து தான் பேருந்து வெள்ளத்தில் சிக்கி தாம் ஆபத்தில் உள்ள விடயம் சகல தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் பேருந்து தாக்கு பிடிக்க முடியாதது நின்ற வேளை பயணிகளின் போர்வைகள் , பெட்சீட்கள் போன்ற துணிகளை இணைந்து , கயிறு போன்று பேருந்தில் கட்டி , பேருந்தில் பயணித்த நீச்சல் தெரிந்த இருவர் தமது உயிரை பணயம் வைத்து , 12 அடிக்கு மேல் பாய்ந்த வெள்ளத்தில் நீந்தி சென்று கயிற்றின் மறுமுனையை அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டியுள்ளனர். அதனாலையே பேருந்து அவ்விடத்தில் வெள்ளத்திற்கு தாக்கு பிடித்து நின்றுள்ளது.
பேருந்தினை மீட்க முதல் நாள் காலை JCB இயந்திரம் மூலம் முயற்சித்துள்ளனர். JCB பேருந்திற்கு அருகில் கூட செல்ல முடியாத நிலையில் வெள்ள ஓட்டம் இருந்ததால் , அது திரும்பி சென்றுள்ளது.
பின்னர் கடற்படையின் சிறிய காற்றடைத்த படகு மூலமே பயணிகள் ஐந்து ஐந்து பேராக பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறக்கி , அருகில் உள்ள கடை கட்டடத்தில் ஏற்றி உள்ளனர். கடை கட்டடம் என்பது 12 X 30 அடி நீள அகலம் கொண்ட சீற் போட்ட கட்டடம்
அவ்வாறாக 69 பேரையும் கடையின் கூரையில் ஏற்றிய பின் சிறிது நேரத்தில் பேருந்தினை வெள்ளம் அடித்து சென்றது.
கூரையில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பாக கடற்படையின் சுழியோடி வீரர்கள் இருவரும் கூரையில் இருந்துள்ளனர். கூரையில் 72 பேர் இருந்துள்ளனர்.
காட்டாற்று வெள்ளத்தால் , கூரையில் இருந்தவர்களை , கடற்படையின் படகில் மீட்க முடியவில்லை.
கூரையில் இருந்தவர்களுக்கு , ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாள் ஹெலி மூலம் மீட்க முயற்சித்த வேளை ஹெலியின் காற்றின் அதிர்வால் கூரை ஆட்டம் கண்டதால் , ஹெலி முயற்சி கைவிடப்பட்டது.
தொடர்ந்தும் வெள்ளம் ஓட்டிட்டு இருந்ததால் , மீட்பு பணிகள் தாமதமாகின , கூரையில் இருந்த கடற்படை சுழியோடிகள் , அருகில் உள்ள தேசி மரத்தில் இருந்து தேசிக்காய் பிடுங்கி அதனை பிழிந்து அங்குள்ளவர்கள் வாய்களை நனைத்துள்ளனர்.
வெள்ளத்தில் விலங்குகள் அடிப்பட்டு செல்வதனை பய பீதியுடன் பார்த்தவண்ணம் இருந்துள்ளனர். அவ்வேளை ஒரு நாய்க்குட்டி , அவர்கள் தங்கியிருந்த கூரைக்கு அருகால் சென்ற வேளை அதனை மீட்டு தம்முடன் கூரையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அதனை இறுதியாக தம்முடன் அழைத்து வந்து ஊரவர்களிடம் கையளித்தனர்.
கூரையில் சிலர் தங்கியிருந்த ஒரு பகுதி உடைந்து , அதில் இருந்த சிலர் வெள்ளத்தில் விழுந்துள்ளனர். உடனே கடற்படை சுழியோடிகள் குதித்து , நால்வரை காப்பாற்றினார்கள்.
அவ்வேளை பத்மநிகேதன் விழுந்தது எவருக்கும் தெரியாது. அதனால் அவர் மீட்கப்படவில்லை.
மறுநாள் (அதாவது வெள்ளத்தில் சிக்கி சுமார் 36 மணித்தியாலங்களின் பின்) மழை விட்டதால் , கலாவாவிக்கு வந்த நீர் வரத்து குறைந்தமையால் , அதன் வான் கதவுகள் பூட்டப்பட்டது.
அதானல் வெள்ளத்தின் வேகம் குறைந்ததே தவிர வெள்ளம் 12 அடி உயரத்திற்கு நின்றது. பின்னர் கடற்படையின் சிறிய படகு மூலம் கூரையில் இருந்து மீட்டப்பட்டு , வெள்ளத்தை தாண்டி அழைத்து வந்த போது அந்த ஊரவர்கள் பிஸ்கெட் உள்ளிட்ட உணவுகள் , பால் பைக்கெட் என்பன கொடுத்து, வாகனங்களில் ஏற்றி நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலையில் மாற்றுடைகள் வழங்கப்பட்டுள்ளன. (பயணம் ஆரம்பித்து சுமார் 48 மணி நேரத்தின் பின் தான் ஆடைகள் மாற்றியுள்ளனர். அது வரையில் ஈர உடைகளுடன் தான் இருந்துள்ளனர்)
பேருந்தில் பயணித்த 69 பேரில் நீதித்துறை சார்ந்தவர்கள் , மாணவர்கள் , கல்வியாளர்கள் , சாதாரண மக்கள் என இருந்துள்ளனர். அவர்களில் இருவரை மட்டுமே காப்பாற்ற முடியவில்லை. ஏனைய 67 பேரும் சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளனர்.

ad

ad