ராஜபக்சே இந்தியா வருகை தமிழர்களை சீண்டிப்பார்க்கும் செயல்: வைகோ ஆவேசம்
-----------------------------------------------------
சென்னை, பிப்.5-
டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தி கூறினோம். மத்திய பிரதேசத்துக்கு வந்தபோது நேரில் சென்று போராட்டம் நடத்தினோம்.
இப்போது திட்டமிட்டு உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவுவதற்காக 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கொடியவன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு இல்லை என்று காட்டுவதற்காக அழைத்து வருகிறார்கள். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறல் விசாரணை விரைவில் வர இருக்கிறது.
அப்போது ராஜபக்சே பற்றிய எண்ணத்தை தடுப்பதற்காக சோனியா இயக்கும் மத்திய அரசு அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து உள்ளது. 47 உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் இனப்படுகொலை ஆவணங்கள் மற்றும் குறுந்தகடு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருக்கிறோம்.
ஈழத்தமிழர்களை காக்க அன்று தமிழகம் தவறி விட்டது. முத்துக்குமார் உள்பட 17 இளைஞர்கள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த தீ இன்னும் அணையவில்லை. இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளது. அதுவும் தமிழகத்தின் தலைவாசலான திருப்பதிக்கு வரவழைக்கிறது. இது தமிழர்களை சீண்டி பார்க்கும் செயல். எனவேதான் அவரை இந்தியாவுக்கு வரவழைத்ததற்காக டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தோம்.


இந்திய அரசை கண்டித்து தன்னலமற்ற தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் உள்ளன. ம.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரத்து 500 பேர் இன்றும் நாளையுமாக ரெயில்களில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டு சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவார்கள்.