புதன், ஜூன் 03, 2015

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு: அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி மரணம்!


 தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளாதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மரணம் அடைந்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஊராட்சியை சேர்ந்த கன்னியாப்பட்டி அதிமுக கிளை
பொருளாளராக இருந்தவர் ஜெயக்குமார். 45 வயதான இவர் நேற்று மதியம் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய உள்ள செய்தி வெளியானது. இதை பார்த்ததும் ஜெயக்குமார் கடும் அதிர்ச்சி அடைந்து புலம்பியுள்ளார். பின்னர் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு  மயங்கி விழுந்துள்ளார்.

அருகில் இருந்த அவரது மனைவி சரசு, ஜெயக்குமார் முகத்தில் தண்ணீர் தெளித்தார். ஆனால் அவர் அசைவின்றி கிடந்தார். உடனே அவரை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு ஜெயக்குமாரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக்  கூறினர். இது குறித்து கீரனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்த ஜெயக்குமாருக்கு பாலமுருகன்,  வீரமணி  ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் அதிமுகவில் 1986 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். ஜெயக்குமாரின் உடலுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.