புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு



இந்திய அரசே!

இலங்கை மீதான போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றவும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா.வி.ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர கோரியும் செப்டம்பர் 21-ஆம் நாள் திங்கள்கிழமையன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!

தமிழக சட்டமன்றத்தில் 2011ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் நாளன்று

- இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்

- இலங்கையில் அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் 2013ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் நாளன்று

- இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்த வேண்டும்.

- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை அனுமதிக்கப்பட வேண்டும். 

- இலங்கை அரசு அடக்குமுறையை நிறுத்தாவிட்டால், இலங்கை அரசின் மீது பொருளாதார தடை வேண்டும்

- இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து அங்குள்ள தமிழர்களிடமும் வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

- ஐ.நா பாதுகாப்பு குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்திய அரசு  கொண்டு வர வேண்டும் 

என்ற தீர்மானமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி ஆண்டுகள்தான் உருண்டோடினவே தவிர....இந்த தீர்மானத்தின் எந்த ஒரு வரியையும் இந்தியப் பேரரசு மதிக்கவில்லை.

மாறாக இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டு இப்போதும் யுத்த கப்பல்களை வழங்கிக் கொண்டு தமிழக சட்டமன்றத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறது இந்தியப் பேரரசு!

இந்திய நாட்டின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏறெடுத்தும் பார்க்காத அலட்சியப்படுத்துகிற இந்தியப் பேரரசின் இறுமாப்பை உலகத் தமிழினம் வன்மையாக கண்டிக்கிறது!

சர்வதேச அரங்கத்தில் உலகத் தமிழருக்கு ஆறுதலாக சற்றே ஆறுதலாக இருந்தது அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகள். இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதில் முனைப்பு காட்டியது... தீர்மானங்களைக் கொண்டு வந்தது அமெரிக்கா. 

ஆனால் இதோ அந்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசும் சிங்களப் பேரினவாத அரசுடன் இப்போது கைகோர்த்து போர்க் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையே போதுமென ஊளையிடுகிறது...

ஆனாலும் இந்திய தேசம் இன்னமும் மவுனியாகத்தான் இருக்கிறது.. தமிழக சட்டமன்றத்தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்திய அரசு தீர்மானத்தைக் கொண்டு வருவது ஒன்றுதான் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய பேரரசு மதிக்கிறது என்பதற்கான ஒரு நடவடிக்கையாக உலகத் தமிழினம் எதிர்பார்க்கிறது.

இத்தனை ஆண்டுகளாகியும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்ற எள்முனையளவும் நடவடிக்கை எடுக்காக இந்தியப் பேரரசைக் கண்டித்தும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வர வலியுறுத்தியும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செப்டம்பர் 21-ஆம் நாளன்று (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியப் போராட்டம் நடைபெறும். இந்த தமிழர் நீதிக்கான போராட்டத்தில் தமிழராய் ஒன்று திரண்டு இந்தியப் பேரரசுக்கு தமிழினத்தின் நெஞ்சுகொதிக்கும் நிலையை உணர்த்துவோம்! தமிழர்களே! அணி அணியாய் திரள்வோம்! வாரீர்! வாரீர்!!


பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ad

ad