புதன், ஜூலை 20, 2016

கரூர் - நடுரோட்டில் ரூபாய் 1600 கோடியுடன் நின்ற கண்டெய்னர் லாரிகள்

கரூர் நெடுஞ்சாலையில் கரூர் - அரவக்குறிச்சி இடையே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நிற்கிறது. இதில் ரூபாய் 1600 கோடி ரொக்கப்பணம் இருப்பதாக கூறப்படுகிறது. லாரிகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இரண்டு லாரிகளும் மைசூரில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு, திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. கரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் என்ற இடத்தில் வரும்போது லாரியின் ஆக்சிஸ் கட்டாகிவிட்டது. இதையடுத்து அந்த லாரிகள் அப்படியே நின்றன. இன்று காலை முதல் போலீசாரும், வங்கி அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விசாரணை நடத்துவம், பார்வையிடுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் என்னவென்று விசாரிக்கும்போது, அந்த லாரிகளில் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரிகளை சுற்றி பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

போலீசார் விசாரணை செய்யும்போது, லாரிக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் சில ஆவணங்களை காட்டியுள்ளனர். அப்போது, மைசூர் ரிசர்வ் பேங்க்கில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் நின்ற இடத்திற்கு கரூர் எஸ்.பி. வந்தியா பாண்டே நேரில் வந்து பார்வையிட்டார். அவரிடமும் இந்த ஆவணங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிக பணப்புழக்கம் இருந்ததாக கூறி அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் ரொக்கமாக 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிப்பட்டது. இந்த நிலையில் 1600 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக இரண்டு கண்டெய்னர் லாரிகளில் நிற்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.