புதன், பிப்ரவரி 22, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வழக்கு: வீடியோ பதிவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவுதமிழக சட்டப்பேரவையில் நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்ககோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.18) எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது ரகசிய வாக்கெடுப்புக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனை எதிர்த்து சபையின் உள்ளே தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் அவைக் காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர். அவையை விட்டு வெளியே வந்த ஸ்டாலின் அவையில் தான் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிகக்கோரி ஸ்டாலின உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார். 

அந்த  மனுவில் "சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஆளுநர், பேரவை செயலர், தலைமைச் செயலர்,தேர்தல் ஆணையருக்கு சமமான அதிகாரி  அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்கு இடைகால தடை விதிக்க வேண்டும். முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று பேரவையின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் வழக்கறிஞர் பாலுவும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கும் இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடு நடத்துள்ளது தொடர்பான வீடியோ ஆவணங்களை தாக்கல் செய்ய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை பிப். 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்