வெள்ளி, ஜூலை 05, 2019

சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை - பொலிசாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு மனு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

“சந்தேகநபர்கள் ஐவரும் சுமணனை சித்திரவதை செய்த குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு எதிராக சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டை முன்வைப்பது சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது.அதனால் கொலைக் குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையை மன்று தள்ளுபடி செய்யவேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரசருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து எதிரிகளையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் துஷித் ஜோன்சன், ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், அக்ரம் ஆகியோர் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.இதன்போதே எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மேற்படி விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தனர்.

“இந்த வழக்கை மூத்த சொலிஸ்டார் ஜெனரல் குமாரரட்ணம் நெறிப்படுத்துவார். அவர் மன்றில் முன்னிலையாக தவணை வழங்கப்படவேண்டும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று வழக்கை செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தது