புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012


போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப் போகிறீர்களா?- சம்பந்தன் கேள்வி
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல போகிறீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகின்றீர்களா என்பதற்கு அரசாங்கமே பதிலளிக்க வேண்டும் என த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, புரிந்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண்டும். அதி பாதுகாப்பு வலயங்கள் கலைக்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் சொந்தக் காணிகளுக்கு திருப்பிச் செல்ல வேண்டும்.
மக்களுடைய காணிகள் திருப்பி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் சம்பந்தமாக முடிவெடுக்கப்பட வேண்டும். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தக்க விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் சமாதானமும் சமத்துவமும் ஏற்படக்கூடிய வகையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படக்கூடிய வகையில், அதிகப்படியான அதிகாரப் பகிர்வுகளுடன் ஒரு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும்.
இவற்றை நிறைவேற்றுவது சம்பந்தமாக அரசாங்கம் ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதை பகிரங்கப்படுத்த வேண்டும். அதை அமுல்படுத்தவேண்டும். அதை அமுல்படுத்துவது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள், மனிதவுரிமைகள் சபை ஆணையாளர் அரசாங்கத்திற்கு உதவலாம். ஆலோசனைகளை வழங்கலாம்.
இது சம்பந்தமாக 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தின்போது ஆணையாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கருமங்களை சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் நிறைவேற்றவேண்டிய ஒரு கட்டாயக் கடமை விலத்த முடியாத ஒரு பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்கள் ஒரு அரசியல் தீர்வையோ அதிகாரப் பகிர்வையோ கேட்கவில்லை. நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகள் அவர்களுக்கு திருப்தியானவை. கிழக்கு மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாகும். அதை உணர்ந்து பல்வேறு நாடுகளும் நிறுவனங்களும் அமைப்புகளும் பலவித உதவிகளை செய்கின்றார்கள்.
பலவிதமான திட்டங்களுக்காக உதவிகளை செய்கின்றார்கள். அந்த உதவிகளை பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றார்கள். இது நீங்கள் செய்யும் அபிவிருத்தியல்ல. இந்த மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்களைக்கண்டு உலக நாடுகள் செய்யும் அபிவிருத்தி.
2010ஆம் ஆண்டு வன்னிக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கையொன்று வழங்கினேன். எமது பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். மக்களுக்கு வீடுகளை வழங்குங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களை வழங்குங்கள் என்று கூறியபோது, என்னிடம் பணமில்லை என்று கூறினார். இந்திய அரசு அத்திட்டத்தை பொறுப்பெடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் எமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. சமஸ்டி அடிப்படையில் ஆட்சி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தந்தை செல்வா அவர்கள் 1949ஆம் ஆண்டு தொடக்கம் கோரிக்கையை முன்வைத்து வந்திருந்தார்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். 1956ஆம் ஆண்டு தான் முதன்முதலில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
எமக்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வுகள் சமஸ்டியின் அடிப்படையில் ஒரு தீர்வு தேவை என்பதை உங்கள் தேர்தல் முடிவுகள் கூறவேண்டும். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கூறியுள்ளது போன்று நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வுகளுடன் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.
அரசாங்கம் முன்னின்று அதை நிவர்த்திக்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்திருக்கின்றபொழுது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய சிபாரிசை நிறைவேற்ற வேண்டுமென்று ஐ.நா.மனிதவுரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்த பிறகு அதற்கு மாறான ஒரு முடிவை நீங்கள் எடுக்கலாமா?
உங்கள் நீண்ட கால நிலைப்பாட்டை இந்த தேர்தல் மூலமாக நீங்கள் ஊர்ஜிதப்படுத்துவீர்களானால் நிறைவேற்ற வேண்டியவற்றை நிறைவேற்றுங்கள் அல்லாதுவிட்டால் வேறு விளைவுகள் ஏற்படுமென்று சர்வதேசம் அரசாங்கத்திற்கு சொல்லும்.
நாங்கள் எவருக்கும் சவால் விடவில்லை. எங்கள் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கு நீண்டகாலமாக ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்து அது முடிவடைந்ததன் பின்பாகவும் தமிழ் மிதவாத தலைவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் அது முடியாமலிருக்கின்றது. இந்த நிலைமையை தொடர முடியாது.
தற்போது இந்த நாட்டினுடைய எல்லைகளுக்கு அப்பால் தமிழ் மக்களுடைய பிரச்சனை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு சர்வதேச மயமாக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய தேர்தல் முடிவின் மூலமாக சர்வதேசத்திற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் இந்த நாட்டில் கௌரவமாக சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். எங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
எமது காணிகளுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எமது அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றப்படக்கூடிய வகையில் எமக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அந்த முடிவைத்தான் இந்த தேர்தல் மூலமாக நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என தெரிவித்தார்.

ad

ad