தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
தமிழோசையில் சங்கரண்ணா - பழைய புகைப்படங்கள் சில
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஒலி வடிவில் - சங்கரண்ணா குரலுடன்
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.
வயோதிகத்தில்...
தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.