அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கேசன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்பு பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டியிருப்பதால் அங்கிருந்து தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
கேசன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த அறிவித்தலை அடுத்து பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்னும் 50 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கேசன்கேணி மக்கள் வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இராணுவமுகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றிடங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு அந்த தொழிலை கொண்டு நடத்தக்கூடிய விதத்திலான மாற்றுக்காணிகளே வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஒக்டோபர் 17-ம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அன்றைய தினம் அறிவிக்கவேண்டும் என்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.