புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012

கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது?வினோ எம்.பி சீற்றம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.


கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை அல்லது முரண்பாடுகள் தோன்றுவதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும்.
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது எனக் கேட்க விரும்புகின்றேன் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்துக் கேட்ட போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தனது ஆதங்கத்தையும்,சந்தேகத்தையும் வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர் வரும் 10 ஆம் திகதி இந்திய அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள கூட்டமைப்பு தூதுக்குழுவில் 2 அல்லது 3 கட்சிகளின் பிரதி நிதிகளே செல்லவுள்ளதாக அறிகின்றேன்.
5 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது முழுமையான ஒரு கூட்டமைப்பின் விஜயமாக அமையப்போவதில்லை.அப்படி எம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.கூட்டமைப்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டவுடன் என்னென்ன விடயங்கள் பேசப்போகின்றோம் என கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு அல்லது கட்சித்தலைவர்கள் கூடி ஆராய்ந்திருக்க வேண்டும்.

தூதுக்குழுவில் யார் யார் பங்குபற்றுவது என்பதனை யார் தீர்மானிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.ஐந்து கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக கூட்டமைப்பாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட சில கட்சிகள் அல்லது தலைவர்கள் புறக்கணிக்கப்படுவர்களேயானால் ஏனைய தலைவர்களும் அல்லது கட்சிகளும் இந்திய விஜயத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

கூட்டமைப்பைக் குலைப்பதற்கோ,சிதைப்பதற்கோ வெளிநாட்டுச்சக்திகளுக்கு,உள்நாட்டு அல்லது உட்கட்சி சக்திகளுக்கு இடமளிக்க முடியாது.

கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் தற்போது அங்கத்துவம் பெறுகின்றன.அதில் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு 2 கட்சிகளின் அங்கத்துவர்களே செல்கின்றனர்.இந்திய அரசுடன் பேசுவதற்கு 3 கட்சிகளின் பிரதி நிதிகள் செல்கின்றனர்.தேர்தல் செயலகத்தில் பதிவு செய்த 4 கட்சிகளே கூட்டமைக்கின்றன.

தேர்தல் வரும் போது மட்டும் 5 கட்சிகளும் ஒன்றாக சேர்கின்றன.ஆக இது தேர்தலுக்கான கூட்டமைப்பா? என மக்கள் சந்தேகிக்கின்றனர் எனக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் 5 கட்சித்தலைவர்களும் அங்கத்துவம் இல்லாத பாதிக்கூட்டமைப்பு அல்லது துண்டாக்கப்பட்ட கூட்டமைப்பின் விஜயத்தை நாம் ஏற்கப்போவதில்லை என்பதுடன் எமது கட்சி சார்பில் பிரதிநிதியை அனுப்பாமல் இருக்க கட்சிக்குள் அழுத்தங்களைப் பிரயோகிக்கப்போவதாகவும் ஏற்கனவே இந்திய அதிகாரிகள் கொழும்பு வரும் போது கூட்டமைப்பினர் இரண்டு அணியாக சந்தித்தமையையும் அவர் நினைவுபடுத்தினார்.

ad

ad