புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2013



வேடம் போடாதீர்கள். வேடம் கலையும். கலைகின்ற காலம் விரைவில் வரும்: கலைஞர்
 
தென்சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று மாலை தொடங்கியது. விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்
. தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். பொங்கல் கலைவிழாவை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் தான் சட்டம் போட்டு தமிழர் திருநாளை கொண்டாடுவீர்களா? நாங்களும் சட்டம் இயற்றி அந்த நாளை தடுக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். யார் தடுத்தாலும் நாங்கள் ஆட்சியில்
 
 இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த நாளை கொண்டாடியே தீருவோம்.
தமிழகத்தில் வளர்க்க பட வேண்டிய கலைகளில் நாட்டுபுற கலைகளும் ஒன்று. சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த முடியாதபடி பல இடையூறுகளால் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் நாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டு இருக்கிறோம். இனி ஆண்டுதோறும் இதுபோன்ற கலைவிழாக்கள் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தமிழர்கள் சார்பில் குரலை உயர்த்தி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றோம். ஆனால் இன்றைக்கு செம்மொழி நிலை என்ன? உங்களுக்கே தெரியும். செம்மொழி பூங்காவின் பெயர் பலகையை ஆட்சிக்கு வந்த நினைவாக ஒரே நாளில் தூக்கி விட்டார்கள்.
எனக்கு ஏதோ எம்.ஜி.ஆர். பிச்சை போட்டார் என்று சொல்லி, நான் முதல்-அமைச்சர் ஆனதே எம்.ஜி.ஆரால்தான் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அது மாத்திரம் அல்ல. கொடநாட்டிலே பேசியிருக்கிறார். கருணாநிதி எம்.ஜி.ஆரிடத்தில் கெஞ்சி கூத்தாடி முதல்-அமைச்சர் பதவியை பெற்றார் என்று.
கொடநாட்டிற்கு போய் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேச வேண்டிய பேச்சா இது. பேச தேவை இருக்கிறதா? அங்கே கருணாநிதியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இங்கே தமிழர் விழாவில் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. இது யாருடைய குற்றம்.
என்மீது கேவலமான, இழிவான ஒரு குற்றச்சாட்டை முதல்-அமைச்சராக இருக்கிற ஒருவரே பேசிய பிறகு, அதை மறுக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறதா? இல்லையா? ஆதாரத்தோடு மறுத்திருக்கிறேன். இந்த ஆதாரங்கள் இல்லை என்று சொல்லட்டும். யாரையும் ஏமாற்ற முடியாது. இதையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம், தமிழ்நாட்டுடைய அரசியல் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் சொல்கிறேன்.
தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக காமராஜர் இருந்திருக்கிறார். பக்தவச்சலம் இருந்திருக்கிறார். அண்ணா இருந்திருக்கிறார், ஏன் எம்.ஜி.ஆரே இருந்திருக்கிறார். நான் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். இதுபோன்ற அசம்பாவிதங்கள், இதுபோன்ற தேவையற்ற வீண் வம்புகள் எப்போதாவது நடைபெற்றது உண்டா? தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த நல்ல விழாவில் சில அறிவுரைகளை ஜெயலலிதாவுக்கு சொல்ல வேண்டிய அளவுக்கு என்னை ஆளாக்கி கொண்டாரே என்பதற்காக வருத்தப்படுகிறேன். இனிமேலாவது எரியாத விளக்குகளை எரிய விடுங்கள். இருண்டு கிடக்கும் நாட்டிலே ஒளி விளக்கு ஏற்றுங்கள். பள்ளமாக இருக்கின்ற பாதைகளை எல்லாம், சாக்கடையில் இருந்து வருகின்ற கொசுக்கள், புழுக்கள், இவைகளால் உற்பத்தியாகின்ற நோய்கள், இவைகளுக்கெல்லாம் இடம் தராமல் மக்களை காப்பாற்றுங்கள். அதுதான் ஒரு அரசுக்கு உரிய தேவை.
நானும் தமிழச்சிதான் என்பதுபோல வேடம் போடாதீர்கள். வேடம் கலையும். கலைகின்ற காலம் விரைவில் வரும். அது பாராளுமன்ற தேர்தலிலே தெரியும். எங்களுடைய கழக தோழர்கள் இவற்றையெல்லாம் பொறுத்து கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பார்கள் வாக்குச்சீட்டுகளால்தான் கொடுப்பார்கள்.
தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இது. அப்படிப்பட்ட கழகத்தை சீரழித்துவிடலாம், பின்னடையச் செய்துவிடலாம் என்று யாராவது கருதினால், அது முதல்-அமைச்சராகவே இருந்தாலும், ஜெயலலிதாவாகவே இருந்தாலும் வெறும் கனவாகவே ஆகிவிடும். கனவாகவே முடிந்துவிடும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இவ்வாறு பேசினார்.

ad

ad