புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013


ராமேசுவரம் கலவரத்தில் 62 பேர் கைது – தாசில்தார் அலுவலகத்தில் பெண்கள் இன்று முற்றுகை

இந்த தகவல் விநாயக மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் சில ஆட்டோ டிரைவர்களுக்கு கிடைத்ததும் அவர்கள் கும்பலாக திரண்டனர். திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த பஸ்சின் கண்ணாடிகள் கல்வீசியும் உடைக்கப்பட்டது. மேலும் கடைகளை அடைக்கும்படி ஆயுதங்களுடன் மிரட்டிய கும்பல் வக்கீல் ராமமூர்த்தி என்பவரது வீட்டுக்குள் புகுந்தும் பொருட்களை சூறையாடியது.
இதற்கிடையில் மற்றொரு கும்பல் வேர்க்கோடு பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், திருமண மண்டபம் போன்றவற்றை சேதப்படுத்தியது. திருமண மண்டபத்தின் முகப்பில் போடப்பட்டு இருந்த பந்தலுக்கும் தீ வைக்கப்பட்டது. நாற்காலி மற்றும் பொருட்களை எடுத்து வந்தும் தீயில் போட்டு எரித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக ராமேசுவரத்தில் பதற்றம் அதிகரித்தது. அங்கு திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து கொண்டு தாங்கள் தங்கி இருந்த விடுதிகளை நோக்கி ஓடினர். பலர் குழந்தைகளை கையில் பிடித்து கொண்டு மூட்டை, முடிச்சுகளுடன் ஊரை காலி செய்தனர்.
கோஷ்டி மோதல், கலவரமாக மாறியதை தொடர்ந்து ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், துணை சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படை விரைந்து சென்று கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றது.
இதற்கிடையில் கலவர கும்பல் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசி மோதி கொண்டன. கற்களும், பாட்டில்களும் சரமாரியாக வீசப்பட்டதால் அந்த பகுதியில் வீதியெங்கும் கற்கள் காணப்பட்டன. கலவர கும்பல் வீசிய பெட்ரோல் குண்டு, ஒரு வீட்டின் மீது விழுந்ததில் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் தலைமையில் இரும்பு தொப்பி அணிந்த கலவர தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் கலவர கும்பல் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியத்தனர். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன், தாசில்தார்கள் கதிரேசன், சந்திரவதனி ஆகியோர் கலவரம் நடந்த இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த திடீர் மோதல்-கலவரத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் கூறியதாவது:-
கலவர சம்பவத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்ந்த 62 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகிறோம். தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலவரத்தை தடுக்க முயன்றபோது, போலீஸ் துணை சூப்பிரண்டு மணி வண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக்கருத்தப் பாண்டி, சாமிதுரை, போலீஸ்காரர்கள் சங்கர், மலைச்சாமி, கேசவன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் கைது செய்யப்பட்ட 62 பேரின் உறவினர்களில் பெண்கள் மட்டும் இன்று காலை திரண்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் நடைபெற்ற இந்த திடீர் மோதலுக்கான காரணம், கோவில் தீர்த்த கிணறுகளில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக இருபிரிவினர் இடையே ஏற்பட்ட விவகாரம் என கூறப்படுகிறது. தற்போது அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கம் என்ற அமைப்பு, கோவில் தீர்த்தங்களில் இருந்து தண்ணீரை எடுத்து பக்தர்களுக்கு ஊற்றி வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் எம்.ஆர்.சி. நகர் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ரிபெல் முத்து ராமலிங்க சேதுபதி யாத்திரை பணியாளர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர். அவர்கள் தீர்த்தம் ஊற்றும் பணி செய்ய தங்களுக்கும் அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோர்ட்டில் வழக்கு விசாரணையும் நடக்கிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் வந்த அறநிலைத்துறை அமைச்சர் ஆனந்தனை புதிய அமைப்பினர் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட விரோதமே ஒரு பகுதி ஆட்டோ டிரைவர் மோதலாக உருவாகி கலவரமாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad