புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013



ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி ஒத்துழைப்பு தாருங்கள் ; திருமாவளவன்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி இந்திய அரசை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் 12-3-2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளில் ஏறத்தாழ 30 நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளன.  ஆனால் இந்திய அரசு தம்முடைய உறுதியான நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை. 
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அகில இந்திய அளவிலான பிற கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.  இந்திய அரசின் சிங்கள ஆதரவு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அத்துடன், மக்களவையில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அளித்த பதிலுரை மனநிறைவு அளிக்கவில்லை எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள், திமுக, அதிமுக, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வெளிநடப்புச் செய்தனர்.  இதன் பின்னரும் இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தவில்லை.
ஆகவே, இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவிடக்கூடாது என்கிற அடிப்படையிலும், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதுடன், சர்வதேச விசாரணைக்கான திருத்தத்தையும் கொண்டுவர வேண்டுமென வற்புறுத்துகிற வகையிலும் இந்தப் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 
கட்சி மாறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  அமைதியான முறையிலும் அறவழியிலும் நடைபெறவுள்ள இந்த அறப்போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் ஈழத் தமிழர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
 பொது வேலைநிறுத்தத்தின் மூலம் இந்திய அரசை தமிழினத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வைப்பது சர்வதேசச் சமூக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்கும்.  ஆகவே, இந்தப் பொது வேலைநிறுத்தத்தை ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad