புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2013



டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம்: கி.வீரமண
 
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 27.03.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று, அதே நேரத்தில், எதிரி ராஜபக்சேவை முன்னிறுத்தாமல்,
திமுக தலைவரை தேவையில்லாமல் விமர்சிப்பது, விவேகம் ஆகாது; பிரச்சனையைத் திசை திருப்புவதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
நேற்று (27.3.2013) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 
‘‘இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதி மன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.’’

மேற்கண்ட தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது.
ஏற்கெனவே இவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை இலங்கையின்மீது உலக நாடுகள் விதிக்க வேண்டும் என்பதின் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
‘டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு  சட்டப் பேரவைத் தீர்மானம்
ஏற்கெனவே ஏழு மாதங்களுக்குமுன் ஆகஸ்டு 12 (2012) சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் 14 முக்கிய தீர்மானங்களில் இவை முக்கியமானவையாகும்.
‘டெசோ’வின் தாக்கம் எத்தகையது என்பதை முன்பு ‘டெசோ’ அமைப்பைக் கேலியும் கிண்டலும் செய்த அத்துணைப் பேரும் உணருவார்கள் என்பது - இதன் மூலம் புரியவில்லையா?
‘டெசோ’ மாநாட்டை தடை செய்ய முயன்ற தமிழ்நாடு அரசு
இந்த ‘டெசோ’ மாநாட்டையே நடத்த தமிழ்நாடு அனுமதி மறுத்தது; ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அருகில் இருப்பதாகவும், நோயாளிகளுக்குத் தொந்தரவு ஏற்படும் என்றும் விநோதமான - விசித்திரமான காரணங்களைக் கூறியது. (ஆனால் இதே ஆளுங் கட்சியின் சார்பில் முன்பும் பின்பும் முதல் அமைச்சர் கலந்து கொண்ட பெரும் நிகழ்ச்சிகள்    நடந்தன என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ‘டெசோ’வின் சார்பில் அம்மாநாட்டின் வரவேற்புக் குழு மேல் முறையீடு வரை சென்று, மாநாட்டிற்கு அனுமதியே பிற்பகல் 2 மணி அளவில்தான்  கிடைத்தது என்பதும் நினைவை விட்டு  அகலாத ஒன்று; மாற்று ஏற்பாடுகளும் தயாராகி விட்ட நிலையில், அந்த அனுமதி சில நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டது.
‘டெசோ’ மாநாட்டுத் தீர்மானங்களும்  அடுத்த நடவடிக்கைகளும்
அம்மாநாட்டின் தீர்மானங்களைத் தான் ‘டெசோ’வின் சார்பில் அய்.நா. தலைமை அலுவலகம் சென்று, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் ‘டெசோ’ தலைவரின் குழுவின் முடிவினை ஏற்று, முக்கிய பொறுப்பாளர்களிடம் அளித்து, ஒரு கருத்து உருவாக்கத்தைச் செய்தனர். அதே மூச்சில் ஜெனிவா சென்று அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சந்தித்து விளக்கித் திரும்பினர்.
அந்தத் தீர்மான வெளிச்சம் ஒரு கலங்கரை வெளிச்சம் போன்றது என்று நாம் முன்பு ஒரு அறிக்கையில் குறிப்பிட்டோம்.
வரவேற்கிறோம் ஆனால்..
அதற்கு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துக்காட்டாக அமைவதாகும். அதனை வரவேற்கிறோம். இந்திய அரசு எந்தளவு இதில் அக்கறை காட்டும் என்பது நாமறிந்ததுதான் என்றாலும் இது தமிழ்நாட்டின் உணர்வாகும்.
ஆனால் அதே நேரத்தில் முதல் அமைச்சர் அவர்கள் டெசோ தலைவர் கலைஞர் பற்றிய விமர்சனத்தின் மூலம் நமது பொது எதிரி இலங்கை போர்க் குற்றவாளி ராஜபக்சே என்பதற்குப் பதிலாக, இங்குள்ள அரசியல் தலைவர் கலைஞர் தான் என்பது போன்ற ஒரு விரும்பத்தகாத போக்கை கடைப்பிடித்துள்ளது - ஏற்கத்தக்கதல்ல.
காங்கிரசும் - சி.பி.எம்.மும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று வெளியே வந்து கூறி, தங்களை தமிழகத்திற்கு, தமிழர்களுக்குச் சரியாக அடையாளம் காட்டியுள்ள நிலையில், கொள்கை அளவில் இதில் ஏற்புடைத்தான தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பது - அரசியல் விவேகம் ஆகாது; ஆத்திரம் அறிவுக்கு எதிரியாகும் எப்போதும்.
முன்பு இப்படி நடந்தது என்று ஆளுங்கட்சி சுட்டிக் காட்டி குற்றஞ்சாட்ட முயன்றால், அது ஆளுங்கட்சியின் - அத்தலைமையின் ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பற்றிய பழைய பேச்சுகள், செய்கைகள் அவருக்கு எதிராகவே ஏராளம் அணி வகுத்து நிற்கும்.
அதில் ‘லாவணிக் கச்சேரி’போல இப்போது ஈடுபட்டால், இலங்கைக் கொடுங்கோலர்கள் ராஜபக்சேக்களே தப்பித்துக் கொள்வர். பிரச்சினை திசை திரும்பி விடும். எனவே அருள்கூர்ந்து அது கைவிடப்படல் வேண்டும்.
இலங்கைத் தூதர் கருத்தை  இந்தியா ஏற்கிறதா?
இலங்கை சிங்களவர்கள் இந்தியாவில் உள்ள வடநாட்டவர்தான் தங்கள் மூதாதையர்கள் - வம்சாவளியினர் என்ற திடீர் ஞானோதயத்தை இலங்கைத் தூதர் அவிழ்த்து விட்டுள்ளார்.

இதுபற்றி மத்திய அரசு இந்திய அரசு இதை ஏற்கிறதா, மறுக்கிறதா? என்பதை இலங்கைத் தூதுவரை அழைத்துக் கூற வேண்டும்.
எப்படியோ பூனைக்குட்டி இதன் மூலம் வெளி வந்துள்ளது!

ad

ad