புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2013


இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வின் திடீர் விலகலை எப்படி உணர்கிறீர்கள்? தி.மு.க.வின் விலகல் காங்கிரசுக்கு லாபமா? நட்டமா? காங்கிரஸுக்குத்தான் இழப்பு என்கிறார்களே?
ஞானதேசிகன் : அரசியலை நான் வியாபாரமாக கருதுவதில்லை என்பதால் அரசியல் கூட்டணிகளை லாப நட்ட கணக்குப்போட்டு மதிப்பிடக்கூடாது என்பது என் கருத்து. கூட்டணி உறவு என்பது இரு தரப்பின் புரிதலோடும் நட்புணர்வோடும் பரஸ்பரம் ஏற்படுத்திக்கொள்வது. உயர்வு தாழ்வுகள் எல்லா நிலைகளிலும் உண்மையாக இருத்தல் அவசியம். உறவு முறிதலின் போதும் அப்படியே ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய லாப நட்ட கணக்குகளைப் போடத் தேவையில்லை.
யாருக்கு இழப்பு என்பது பற்றியெல்லாம் நாங்கள் இன்னும் ஆராயவில்லை. அப்படி ஆராய்வது தேவையற்ற ஒன்று என கருதுகிறேன். தமிழகத்தில் 2006-2011 தேர்தலில் 95 எம்.எல்.ஏ.க்களைப் பெற்ற தி.மு.க.விற்கு 35 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஆதரவு அளித்ததால் தி.மு.க. ஆட்சி அமைத்தது. 5 வருடம் தி.மு.க. நிறைவும் செய்தது. அதேசமயம் மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு   ஆதரவளித்ததுடன் ஆட்சியிலும் பங்கு கொண்ட தி.மு.க.வுக்கு 3 கேபினெட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்களை தந்தது காங்கிரஸ். ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தரவில்லை தி.மு.க! ஆட்சியில் பங்கு வேண்டும் என்று  தமிழக காங்கிரஸில் குரல்கள் வலுத்தபோதும், தி.மு.க.வுக்கு எந்த நெருக்கடியையும் அகில இந்திய காங்கிரஸ் தரவில்லை. இப்படி உறவுகள் தொடர்ந்த நிலையில், திடீரென்று உறவை தி.மு.க. முறித்துக்கொண்டிருப்பது எதிர்பாராதது. என்னைப் பொறுத்தவரை வருத்தம்தான்.
தி.மு.க.வின் திடீர் விலகலுக்கு அவர்கள் ஒரு காரணம் சொல்லியுள்ளனர். என்ன காரணமாக இருக்கக்கூடும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
ஞானதேசிகன் :  சில கோரிக்கைகளை முன் வைத்து சோனியாவுக்கு ஃபக்ஸ் மூலம் கடிதம் அனுப்புகிறார் கலைஞர். அந்த கடிதத்திற்குப் பிறகு 3 மத்திய அமைச்சர்கள் 18-ந் திகதி மாலை சென்னை வந்து கலைஞரை சந்தித்து விவாதிக்கிறார்கள். நீண்ட நேரம் விவாதத்திற்குப் பிறகு அன்றிரவு டெல்லிக்கு திரும்புகிறார்கள் மத்திய அமைச்சர்கள். இந்த விவாதத்தில் நான் கலந்துகொள்ள வில்லையென்றாலும் எந்த ஒரு  இடத்திலும் கூட்டணியிலிருந்து விலகுவதாக எதிர்மறைக் கருத்துக்களை கலைஞர் தெரிவிக்கவில்லை. அதேசமயம், அவர் வைத்த நிபந்தனைகள் பற்றி டெல்லியில் ஆலோசித்துவிட்டு சொல்வதாக மத்திய அமைச்சர்கள் கிளம்புகின்றனர்.
மறுநாள் இது தொடர்பாக, சோனியா தலைமையில் காங்கிரஸின் உயர் நிலைக்கூட்டம் 10 மணிக்கு நடக்கிறது. கூட்டம் முடிவதற்குள் ளேயே, கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக  11 மணிக்கு அறிவித்துவிடுகிறார் கலைஞர். இந்தத் தகவல் காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. காரணம் இதை யாரும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால், 18-ந் தேதி இரவுக்கும் 19-ந் திகதி காலைக்குள்ளும் என்ன நடந்தது என்பது கலைஞருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த உண்மைக் காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.
அமெரிக்கா தாக்கல் செய்த இறுதி தீர்மானம் தங்களுக்கு கிடைத்தது என்றும் அதில் தாங்கள் வைத்த கோரிக்கைப்படி எந்த திருத்தத்தையும் இந்தியா செய்யவில்லை என்றும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கலைஞர் விளக்கமளித்திருக்கிறாரே?
ஞானதேசிகன் : தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க. 2 நிபந்தனைகளை வைக்கிறது. அதை காங்கிரஸ் ஆராய் கிறது. தி.மு.க.வின் கோரிக்கைகளை காங்கிரஸ் முடியும் என்றோ, முடியாது என்றோ ஏதேனும் ஒரு பதிலை தெரிவித்திருந்தால் தானே அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவேண்டும். காங்கிரஸின் முடிவை தெரிந்து கொள்ளாமலே முடிவு எடுத்தது தி.மு.க.தானே? அதனால் உண்மைக் காரணங்கள் தி.மு.க.வுக்குத்தான் தெரியும்.
தி.மு.க.வின் விலகலை அடுத்து மாநில தலைவர் என்கிற முறையில் உங்களை அழைத்து சோனியா விவாதித்ததாக சொல்லப்படுகிறதே?
ஞானதேசிகன் : சோனியா காந்தியை சந்தித்தேன். அந்த சந்திப்பில் தி.மு.க. விலகியது குறித்து என்னிடம் எதுவும் அவர்  விவாதிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக காங்கிரஸ் கட்சியும் ஆட்சியும் எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறது என்பதை விவரித்தார். குறிப்பாக, ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு 500 கோடி ஒதுக்கீடு செய்த போது அதை 1000 கோடியாக உயர்த்தியதை சொன்னார். இப்படி நிறைய நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை தமிழர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? உண்மையை தமிழர்களிடம் விளக்குங்கள் என்றார் சோனியா. மேலும், இலங்கையில் போர்க்குற்றங்களை செய்தவர்கள் தண்டிக் கப்பட வேண்டுமென்பதில் காங்கிரசுக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால், அது குறித்து  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைப் பொறுத்தவரை மத்திய அரசும் வெளியுறவுத்துறையும்தான் முடிவெடுக்க முடியும். இப்படி இருக்கும் நிலையில் என்னையும் என் குடும்பத்தையும் தாக்கிப் பேசுகிறார்களே என்று உருக்கமாக மனம் வெதும்பினார் சோனியா.
அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக திருத்தம் கொண்டு வரப்படும் என்று ப.சிதம்பரம் உறுதியுடன் பேசினார். ஆனால், அப்படி எந்த திருத்தத்தையும் காங்கிரஸ் கொண்டு வரவில்லையே?
ஞானதேசிகன் : வரைவு தீர்மானத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று இருந்தது. அந்த நிபந்தனையை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஆனால், தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளின் ஒப்புதலைப் பெற்று வைத்திருந்த அமெரிக்காவிடம் அந்த நாடுகள் சர்வதேச விசாரணை என்பதை நீக்க வலியுறுத்தின. அமெரிக்காவும் இந்தியாவும் எவ்வளவோ சொல்லியும் அந்த நாடுகள் அந்த வார்த்தையை ஏற்கத் தயாரில்லை. அதனால், ஒருகட்டத்தில், தான் கொண்டு வரும் தீர்மானம் தோற்றுப்போய்விடக்கூடாது என்பதற்காக சர்வதேச விசாரணையை நீக்கி இறுதி தீர்மானத்தை தாக்கல் செய்தது அமெரிக்கா. திருத்தம் செய்ய இந்தியா எல்லா முயற்சிகளையும் எடுத்தது. மற்ற நாடுகள் ஒத்துழைக்காததால் இந்தியாவின் முயற்சி வெற்றி பெறவில்லை.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் வெளி வந்துவிட்டன. அந்த நிலையில் இனப்படுகொலை என்றோ போர்க்குற்றங்கள் என்றோ சொல்வதற்கு இந்தியா ஏன் தயங்க வேண்டும்? இது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவந்திருக்கலாமே?
ஞானதேசிகன் : இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் என்கிற வார்த்தைகளை பிரகடனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதனை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் வந்திருக்கலாம். சாட்சிகளும் இருக்கலாம். ஆனால் அதனை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது. இதனை சர்வதேச சட்டங்கள் அழுத்தமாக சொல்கின்றன. அதனால் முதலில் சம்பந்தப்பட்ட நாடே விசாரிக்க வாய்ப்பு தர வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை இந்த வாய்ப்புகள் தரப்படும். அதன் பிறகும் அந்த நாடு அதனை நிறைவேற்ற மறுக்கிறபோது தான் சர்வதேச விசாரணைக்கு சர்வதேச நாடுகள் கோரிக்கை வைக்கும். அப்படி வருகிற சர்வதேச விசாரணையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இனப்படுகொலைகள் என்றும் நிரூபணமானால் அப்போது அவைகள் பிரகடனப்படுத்தப்படும்.
அப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாகத்தான் ஒரு நாட்டின் மீது நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் எடுக்க முடியுமே தவிர, எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் தீர்மானத்தை நிறைவேற்றிட முடியாது. அதையும் மீறி நிறைவேற்றினால் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைக்காது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணியாகவும் ஆசிய நாடுகள் ஒரு அணியாகவும் நிற்கின்றன.  இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஆசிய நாடுகள் அனைத்தும் வாக்களித்தபோது தமிழகத்தின் உணர்வுகளை மதித்து தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா மட்டும்தான்.
அகில இந்திய காங்கிரஸில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து போனதால் த.மா.கா.வை மீண்டும் ஜி.கே.வாசன் உருவாக்கப்போகிறார் என்கிற தகவல்கள் பரவிக் கிடக்கிறது. தற்போது கூட்டணியிலிருந்து தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில் இந்த உருவாக்கம் வலுப்பெற்றிருப்பதாகவும் அப்படி த.மா.கா.வை உருவாக்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாசன் முயற்சிப்பதாகவும் செய்திகள் வருகின்றனவே?
ஞானதேசிகன் : முற்றிலும் இட்டுக்கட்டி பரப்பப்படுகிற தவறான கருத்து இது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி காங்கிரஸை பலகீனப்படுத்த தமிழகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, மேலும் காங்கிரஸை பலகீனப்படுத்தவே த.மா.கா.வை உருவாக்குகிறார் வாசன் என்று பரப்பப்படுகிறது. த.மா.கா.வை உருவாக்கும் எந்த முயற்சியிலும் வாசன் ஈடுபடவில்லை.
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம். அப்படி வரும் பட்சத்தில் தி.மு.க.வுடன் உறவுகள் புதுப்பிக்கப்படும் என்கிற ஒரு தகவலும் காங்கிரஸில் இருக்கிறதே?
ஞானதேசிகன் : மத்திய அரசுக்கு முன்கூட்டி தேர்தல் வராது. 2014 வரை முழுமையான ஆட்சி செய்யும் வலிமை காங்கிரசுக்கு இருக்கிறது. தேர்தல் கூட்டணி அமைப்பதற்கும் வியூகங்களை வகுப்பதற்கும் ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. அது இயல்பானதும் கூட. கொள்கை அளவில் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஆனால், அவைகள் தேர்தல் நேரங்களில்தான் தெரியுமே தவிர இப்போதைக்கு தெரியாது. நீங்கள் சொல்வது போல, எனக்கு எந்தத் தகவல்களும் இல்லை. ஏனெனில், கூட்டணி உறவை தி.மு.க.தான் முறித்துக் கொண்டது. இதற்கு தி.மு.க.தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர காங்கிரஸ் அல்ல.

ad

ad