புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2013


மண்தின்னி – மகேஸ்வரிநிதியம்

கடந்த 04 வருடங்களில் வடமராட்சி கிழக்கில் ரூபா 4,000 மில்லியன் மண்கொள்ளை – தொடர்ந்து பல்லாயிரம் மில்லியன் மக்களின் பணம் கொள்ளையடிக்கத் திட்டம் – தட்டிக்கேட்பவர்கள் யார்?

டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் கடந்த 04 வருடங்களில் ரூபா நான்காயிரம் மில்லியனுக்கு மேல் பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச சபைக்கு, அதன் அபிவிருத்திக்கு, அப்பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குஉரிய முறையில் செலவிடப்பட்டிருந்தால் மருதங்கேணி பிரதேச சபை மாநகரசபையாக தரமுயர்ந்திருக்கும். அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? அந்தப் பணத்தை கொண்டு தனியே ஒரு கும்பல் மட்டும் சுகபோகம் அனுபவித்திருக்கிறது. மகேஸ்வரி நிதியம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் (என்.ஜி.ஓ) ஒன்றின் பெயரை சொல்லி மக்களின் பெருந்தொகைப் பணத்தை கையாடல் செய்து வருகின்றது. இந்த ஊழலை தட்டிக்கேட்கும் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை ஏற்று நடத்தும் சந்தர்ப்பங்களின் போது அப்பிரதேச மக்கள், சமூகத்தலைவர்கள், அரச ஊழியர்கள் முன்னிலையிலேயே தனது கட்சி உறுப்பினர்களை அடிப்பது, திட்டுவது, அறைவது போன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றார். இதன் மூலம் பொதுமக்களை மறைமுகமாக மிரட்டும் செயலில் அமைச்சர் ஈடுபடுவதாக மக்கள் கருதுகின்றார்கள்.
அமைச்சரின் ஊழலுக்கு துணைபோகும் ஒரு சேவகராகவே அப்பகுதி உதவி அரச அதிபரும் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். சேவை பெறப்போகும் மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி துரத்தியடிக்கும் அவர் மக்கள் சேவகராக இல்லாமல், அமைச்சரின் சேவகர் போல் செயற்படுகிறார்.
மணல் வளம் நிறைந்த, இயற்கை வளம் நிறைந்த வடமராட்சி கிழக்கு பிரதேசம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் என்.ஜி.ஓ வினால் சிதைக்கப்பட்டு வருகின்றது. சீரழியும் இயற்கை வளத்தை மறுசீரமைக்கவும், பெறப்படும் வருவாயில் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுமோ, எவ்விதமான திட்டங்களும் இல்லை.
வடமராட்சி கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட மண்பிணக்கு காரணமாக குடத்தனையை சேர்ந்த தேவராசா கேதீஸ்வரன் என்ற சுற்றாடலை நேசிக்கும் இளைஞர் ஒருவர் 2010 டிசம்பர் 31ஆம் திகதி இரவு 9.00 மணிக்கு, இனந்தெரியாத ஆயுததாரிகளால் கோரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் வடமராட்சி கிழக்கு மக்களுக்கு 2011 புதுவருட நாள் துக்க நாளாக மாறியது. இவ்வாறான நிகழ்வுகள் அப்பிரதேச மக்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்கும், வீட்டுத்திட்டங்களுக்கும், பொதுமக்களின் தனிப்பட்ட கட்டுமானங்களுக்கும் எதிர்வரும் காலங்களில் பல இலட்சக்கணக்கான கியூப் மணல் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளைகளில், மகேஸ்வரி நிதியம் நீதியுடன் செயற்படும் என்று நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. அபிவிருத்திக்கு வரும் பணத்தை ஏகபோக மணல் விற்பனை மூலம் சுரண்டி தமது மோசடியான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அமைச்சரும், அவரது சகாக்களும் பயன்படுத்தக்கூடும் என்று யாழ் மாவட்ட மக்கள் அஞ்சுகின்றனர்.
நிபந்தனைகள் மீறப்படுகின்றன.
1. மாதம் ஒன்றுக்கு 20,000 கியூப் (7,000 டிப்பர்-லோட்கள்) அகழலாம் என புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அகழப்படுவதோ அதனை விட பல மடங்கு அதிகம். அரசியல் பின்புலம் இருப்பதால் சட்டவிரோதமான இவர்களது செயற்பாடுகளை தடுக்க எவரும் முன்வருவதில்லை.
2. மணல் அகழ்வு அனுமதிப் பத்திரத்தின் பிரதியினை அகழ்வு நடைபெறும் பிரதேசத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டுள்ளது. சுற்றாடல் அறிக்கையின் பிரதிகள், மற்றும் உள்ளுர் பிரதேச சபையின் அனுமதிப்பத்திரத்தின் பிரதிகள் என்பவைகள் கூட மணல் அகழ்வு நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதில்லை.
3. 3 கியூப் அளவுக்கு மேல் உள்ள டிப்பர்களில் வடமாகாணத்தில் எங்கும் மணல் ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் மகேஸ்வரி நிதியத்தின் 7 கியூப் டிப்பர்கள் நிரம்பி வழிய, வழிய மண்ணை அகழ்ந்து செல்கின்றன.
4. ஒரு வழி அனுமதிப்பத்திரத்திற்கு ஒரு தடவை மட்டும் மணல் ஏற்றலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் விதிமுறையை மீறி மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர்கள் 02 – 03 தடவைகள் மண் ஏற்றிச் செல்கின்றன.
5. இது தவிர என்.ஜி.ஓ என்ற முறையில் இவ்விதம் ஈட்டும் பணத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. ஆனால் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதாக வெளியில் கூறிக்கொண்டு தமது மோசடியான அரசியல் வேலைத்திட்டங்களை நிறைவேற்றவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழுவினர் இப்பணத்தை பயன்படுத்துவதாக மக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு வெளிப்படையான பதில் எதனையும் மகேஸ்வரி நிதியம் அளிக்கவில்லை.
மேற்படி மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்தோ, அல்லது அவரது மகேஸ்வரி நிதியத்திடமிருந்தோ உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் மறு அறிவித்தலின்றி எமது அமைப்பு போராட்டத்தில் குதிக்கும் என்று எச்சரிக்கிறோம். மருதங்கேணி பிரதேசத்தில் மகேஸ்வரி நிதியத்தின் சட்ட விரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு மணல் மண்ணிற்கு சொந்தக்காரர்களை மருதங்கேணி பிரதேச மக்களும், யாழ் மாவட்ட மக்களும் பயனடையத்தக்க வகையில் திட்டம் ஒன்று எம்மால் நடைமுறைப்படுத்தப்படும்.
யுத்தம் முடிவடைந்து 04 வருடங்களாகியும், மீள்குடியேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை அபகரிக்க திரை மறைவில் சதித்திட்டங்கள் நடைபெறுகின்றன. வேலைவாய்ப்புக்கள், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள். யாழ் மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கலாச்சார சீர்கேடுகளும், கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு காப்பகங்களில் கூட பாதுகாப்பு இல்லை.
இந்நிலையில் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் பெருந்தொகையில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை மூலம் ஈட்டப்படும் பணம் மக்களது நன்மைக்காகத்தான் பயன்படும் என்று எவராவது உத்தரவாதம் அளிக்க தயாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நன்றி
இவ்வண்ணம்
உண்மையுள்ள,
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

ad

ad