புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2013


இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு நேரக்கூடாது!- பிரதமருக்கு வைகோ கடிதம்

துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த போது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத் தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத் தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப் போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர்.
இதே போன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்குள்ளான காட்சியை சனல்4  தொலைக்காட்சி காணொளி மூலம் 2010ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரிணியும் கொல்லப்படுவார்.
எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹரிணி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும், ஜஸ்வந்த் சிங்கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்துள்ளார்.
இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்துள்ளனர்.

ad

ad